அர்ச். மத்தில்திஸம்மாள். இராணி (கி.பி. 968).
பிரபு கோத்திரத்தில் பிறந்த மத்தில்திஸ் என்பவள் சிறு வயதிலேயே கன்னியர் மடத்திற்குத் தலைவியான அவளுடைய அத்தை வசம் ஒப்புவிக்கப்பட்டு, உலகப் படிப்புடன் ஞானப் படிப்பையும் கற்று வந்தாள்.
இவளுக்கு வயது வந்தவுடன் ஹென்றி என்னும் பிரபுவுக்கு மணமுடித்துக் கொடுக்கப் பட்டாள்.
ஹென்றி என்பவர் சில காலத்திற்குப்பின் ஜெர்மனி தேசத்திற்கு அரசனாகத் தெரிந்துகொள்ளப்பட்டார்.
மத்தில் திஸ் இராணி உலக அறிவுடையவனான தன் புருஷனை ஜெப தபத்தாலும் நற்புத்தியாலும் தேவ பக்தனாகச் செய்தாள்.
இந்தப் புண்ணியவதி சகல புண்ணியத்திலும் ஞானக் கண்ணாடியாய் விளங்கி, ஏழைகள் மட்டில் அதிக இரக்கம் காட்டி, தன்னால் முடிந்த உதவி சகாயங்களை அவர்களுக்குப் புரிந்து வந்தாள்.
திருமணமான 23 வருடங்களுக்குப்பின் ஹென்றி இராஜா இவள் வேண்டுதலால் பாக்கியமான மரணமடைந்தார்.
இராணி தன் ஜெப தபத்தாலும், ஒருசந்தி உபவாசத்தாலும் விசேஷமாக திவ்விய பலிபூசைகளை ஒப்புக்கொடுப்பதினாலும், தன் கணவனுடைய ஆத்தும இளைப்பாற்றிற்கு உதவி புரிந்து வந்தாள்.
இவளுக்குப் பிறந்த மூன்று குமாரர்களில் மூத்தவர்களான இருவர் தங்கள் தாயாருக்குச் சொந்தமான சொத்துக்களை அநியாயமாக அபகரித்துக்கொண்ட போதிலும், பிறகு தங்கள் தவறைக் கண்டுணர்ந்து அதை அவளுக்கு திருப்பிக்கொடுத்து விட்டார்கள்.
மத்தில்திஸம்மாளோவெனில் முன்னிலும் தர்ம வழியில் உத்தமியாக வாழ்ந்து, கடைசி தேவ திரவிய அநுமானங்களைப் பக்தியுடன் பெற்று அர்ச்சியசிஷ்டவளாக் காலஞ் சென்றாள்.
யோசனை
ஸ்திரீகள் உலக நாட்டமுள்ள தங்கள் கணவர்களை ஜெப தபத்தாலும் நற்புத்தியாலும் தர்ம வழியில் நடக்கச் செய்வார்களாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் .
அர்ச். அசெப்சிமாஸும் துணை., வே.
அர்ச். பொனிபாஸ், மே.