அர்ச். போனிபாஸ். வேதசாட்சி (கி.பி. 307)
உரோமையில் அழகும் திரண்ட ஆஸ்தியையும் உடையவளுமான அக்லாயே என்னும் ஒரு சீமாட்டி இருந்தாள். இவள் உரோமையிலுள்ள பிரபுக்கள், தேசாதிபதிகள், வங்கி உரிமையாளர்கள் போன்ற பிரமுகர்களுக்கு பலமுறை சிறப்பாக விருந்திட்டு பிரபலமடைந்திருந்தாள்.
இவளுடைய அரண்மனைக் காரியங்களை விசாரிக்கும்படி போனிபாஸ் என்பவனை தன் அரண்மனையிலே வைத்துக்கொண்டு இருவரும் பாவ வழியில் நடந்துவந்தனர். போனிபாஸ், தன் எஜமானியுடன் பாவ வழியில் நடந்த போதிலும் ஏழை எளியவர்கள் மட்டில் தயவு காட்டி அவர்களை அன்புடன் விசாரித்து வந்தான்.
ஒரு நாள் அக்லாயே தன் பாவதோஷமுள்ள நடத்தையைப்பற்றி யோசித்துப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, தன் நடத்தையைத் திருத்திக்கொள்ள தீர்மானித்து, போனிபாஸைப் பார்த்து, நாம் இப்படிப் பாவ வழியில் நடந்து இறந்தால் நரகமே நமக்கு கதியாகும்.
ஆகையால் இது முதல் நமது நடத்தையை திருத்திக் கொண்டு வேதசாட்சிகளுடைய மன்றாட்டால் நமது பாவங்களுக்கு உத்தரிப்பது உத்தம வழியாகும். ஆகையால் நீர் கீழ்த்திசைக்குச் சென்று ஒரு வேதசாட்சி யின் சரீரத்தை நமது அரண்மனைக்குக் கொண்டு வாரும் என்றாள்.
அப்படியே ஜெபத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் தேவ உதவியை மன்றாடி, வேத கலகம் மும்முரமாய் நடக்கும் சிலிசியாவுக்குப் போய்ச் சேர்ந்து, ஒரு ஊரில் அநேக கிறீஸ்தவர்கள் கொலைஞரால் வாதைப்பட்டு சாவதைக் கண்டு அவர்களுக்குத் தைரியஞ் சொல்வதை அறிந்த அதிபதி, போனிபாஸைப் பிடித்து கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடும்படிக் கட்டளையிட்டான்.
ஆனால் அவர் யாதொரு சேதமுமின்றியிருப்பதை அதிபதி கண்டு அவர் தலையை வெட்டும்படி கற்பித்தான். போனிபாஸுடைய ஊழியர் அவருடைய சரீரத்தைக் கொண்டு போய்த் தங்கள் எஜமானிக்கு கொடுத்தார்கள்.
அவள் அதை தன் அரண்மனையில் பத்திரப்படுத்தி அதற்கு முன் நாள்தோறும் வேண்டிக்கொண்டு, ஜெபத்திலும் தபத்திலும் தன் ஜீவிய நாட்களைப் போக்கி புண்ணிய வழியில் காலஞ் சென்றாள்.
யோசனை
நாமும் நமது பாவப் பழக்க வழக்கங்களை விட்டொழிக்கும்படி அர்ச்சியசிஷ்டவர்களுடைய உதவியை மன்றாடுவோமாக