ஏப்ரல் 14

முத். லிட்வீனம்மாள். கன்னிகை (கி.பி. 1433) 

லிட்வீனம்மாள் ஹாலந்து தேசத்தில் பிறந்து அவளுக்கு 7 வயது நடக்கும் போதே தேவதாயார் மட்டில் விசேஷபக்தி வைத்து அவளுடைய சுரூபத்தை வெளியிடங்களில் பார்க்கும்போதெல்லாம் ஒரு மங்கள வார்த்தை மந்திரம் சொல்லி வணங்குவாள்.

12-ம் வயதில் தன் கன்னிமையை சர்வேசுர னுக்கு ஒப்புக்கொடுத்தாள். இவள் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து பனிக்கட்டி உறைந்த மைதானத்தில் விளையாடும்போது கால் தவறி கீழே விழுந்ததினால் அவளுடைய விலா எலும்பில் ஒன்று முறிந்து அதனால் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தாள்.

இதனால் அவள் வயிற்றில் இரணமுண்டாகி வாதைப்பட்டாள். மேலும் அவள் சரீரத்திலும் விசேஷமாக முகத்திலும் பல கட்டிகள் உண்டாகி அவற்றால் வெகு வேதனைப்பட்டு வந்தாள்.

இந்த கொடூர வியாதியால் அநேக வருடகாலம் படுக்கையிலிருக்க வேண்டியதாயிற்று.

வெகு காலம் ஆகாரமும் நித்திரையுமின்றி சங்கடப்பட்டாள்.

இந்தப் புண்ணியவதி அடிக்கடி தேவநற்கருணை வாங்கி ஆறுதலடைந்தாள்.

இவள் நமது கர்த்தருடைய திருப்பாடுகளின் மட்டில் விசேஷ பக்தி வைத்து அவற்றைப்பற்றி தியானித்து வந்தபடியால், தன் கடின வியாதியின் நோயைப் பொறுமையுடன் அனுபவித்து வந்தாள்.

இவளது பெற்றோர் இறந்தபின் கிறிஸ்தவர்களுடைய தருமத்தால் ஜீவித்து, அந்த தருமத்தின் மிச்சத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்வாள்.

வியாதியால் உண்டான சங்கடம் போதாதென்று வேறு ஒறுத்தல் முயற்சிகளையும் அனுசரித்து, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து 38 வருடம் படுக்கையிலிருந்துகொண்டே சொல்லமுடியாத வேதனை அனுபவித்து, தேவதூதரால் சந்திக்கப்பட்டு, அவர்களுடைய ஆதரவைப் பெற்று, அநேகப் புதுமைகளைச் செய்து மோட்ச சம்பாவனைக்குள்ளானாள்.

யோசனை 

நமக்குண்டாகும் வியாதியை குறைகூறாமல் அதைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வோமாகில் நமது பாவக்கடனை இவ்வுலகிலேயே பரிகரித்துக் கொள்ளலாம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். திபூர்சீயுஸும் துணை., வே.
அர்ச். கார்புஸும் துணை., வே.
அர்ச். அந்தோணியாரும் துணை., வே.