அக்டோபர் 14

அர்ச். கல்லிஸ்துஸ் - பாப்பாண்டவர், வேதசாட்சி (கி.பி. 222)

இவருடைய அரிதான புண்ணியங்களைக் குறித்து பாப்பாண்டவர் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டார். இவர் காலத்தில் அஞ்ஞான இராயனால் வேத கலகமுண்டாகி கணக்கற்ற கிறீஸ்தவர்கள் கொல்லப்பட்ட போதிலும், கல்லிஸ்துஸ் நல்ல ஆயனைப் போல கிறீஸ்தவர்களுக்குப் புத்தி சொல்லி விசுவாசத்தில் அவர்களை உறுதிப்படுத்திக்கொண்டு வந்தார். 

இராயனுடைய கட்டளைப்படி இவரைப் பிடிக்க வந்த சேவகர் கண் தெரியாமல் குருடரானார்கள். மேலும் கிறீஸ்தவ வேதத்தைப்பற்றி பூசாரிகள் பசாசிடம் குறி கேட்டபோது, கிறீஸ்தவ வேதமே மெய்யான வேதம், மற்ற மதங்கள் அபத்தமானவை என்று அது விடை கொடுத்தது. 

இதைக் கேட்ட பல்மாசியுஸ் என்னும் அதிபதி சத்திய வேதத்தைக் கைப்பற்றிகொண்டான். இதுவுமன்றி கல்லிஸ்துஸுடைய பிரசங்கத்தால் அநேக அஞ்ஞானிகள் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள். கல்லிஸ்துஸ், தேவமாதா பெயரால் ஒரு கோவில் கட்டி, அதைச் சுற்றிலும் இருந்த இடத்தில் மரித்த கிறீஸ்தவர்களை அடக்கம் பண்ணும்படிச் செய்தார். 

அந்த திருத்தலம், கல்லிஸ்துஸ் கல்லறையென்று வழங்கப்பட்டு வருகிறது. அதில் மாத்திரம் 1,70,000 வேதசாட்சிகளின் சரீரமும் அநேக பாப்புமார்களின் சரீரமும் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. 

கடைசியாய் கல்லிஸ்துஸ் வேதத்திற்காகப் பிடிபட்டு கொடூரமாய் அடிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். சிறையிலும் சில அஞ்ஞானிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததைப்பற்றி அறிந்த இராயன் அவரைக் கொல்லும்படி கட்டளையிட்டான்.

யோசனை

அபிஷேகம் செய்யப்பட்ட கல்லறையை நாம் பாதுகாத்து, அதைக் காணும்போது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். டோனேசியன், து.
அர்ச். பர்கார்ட், மே. 
அர்ச். தோமினிக், து.