ஆகஸ்ட் 15

அர்ச். தேவமாதா மோட்சத்திற்கு ஆரோபணமான திருநாள்.


சேசுநாதர் சுவாமி மோட்சத்திற்கு ஆரோகணமானபின் தேவமாதா அப்போஸ்தலர்களுக்கும் புதுக் கிறீஸ்தவர்களுக்கும் புத்தி போதகம் சொல்லி, கஷ்டம் சங்கடங்களில் அவர்களுக்கு ஆறுதல் கூறி, இடைவிடாமல் மோட்சத்தைப்பற்றி தியானித்து வந்தார்கள். 

அவர்களது ஆத்துமம் உடலை விட்டு பிரிவதற்குமுன் அப்போஸ்தலர்களும் விசுவாசிகளும் கன்னிமரியாயைச் சூழ்ந்து, துக்கத்துடன் நிற்கும்போது, அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகள் கூறி அற்ப வியாதியும் நோயுமின்றி கண்மூடினார்கள். 

அக்கணமே அவர்கள் ஆத்துமம் மோட்சத்திற்கு சென்றது. அவர்களுடைய திருச் சரீரத்தை அப்போஸ்தலர்களும் விசுவாசிகளும் ஜெத்சமெனி என்னும் ஸ்தலத்தில் அடக்கம் செய்தார்கள். 

மூன்றாம் நாள் அவர்களுடைய ஆத்துமம் மறுபடியும் அவர்களுடைய சரீரத்தில் பிரவேசிக்கவே, தேவ தாயார் சம்மனசுக்களால் சூழப்பட்டு ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்குப் சென்றார்கள். மோட்சத்தில் சகல சம்மனசுக்களுக்கும் அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் மேலான சிம்மாசனத்தில் ஸ்தாபிக்கப்பட்டுப் பரலோக பூலோக இராக்கினியாக முடி சூட்டப்பட்டார்கள்.

நமது தேசத்திற்கு வந்திருந்த அர்ச். தோமையார் புதுமையாக ஜெருசலேம் நகருக்குப் போய் சேர்ந்து, தேவமாதாவைக் கண்டு பேசாததினால் துக்கப்பட்ட போதிலும், அவர்களது திருச் சரீரத்தையாகிலும் பார்க்க வேண்டுமென்று விரும்பியபடியால் அப்போஸ்தலர்கள் அவர்கள் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அவர்களின் வஸ்திரங்கள் தவிர வேறொன்றையுங் காணாததினால், அதிசயித்து தேவமாதா மோட்சத்திற்கு ஆத்தும சரீரத்தோடு போனார்களென்று நிச்சயித்தார்கள். 

இந்த விருத்தாந்தமெல்லாம் மகாத்துமாவான மரிய ஆகிர்தம்மாள் தாம் கண்ட காட்சியில் எழுதி வைத்தார்கள். தேவதாயாருடைய திருச் சரீரம் வைக்கப்பட்ட கல்லறையில் அநேக அற்புதங்கள் நடந்தேறி வருகின்றன.

யோசனை

நாமும் பரலோக பூலோக இராக்கினியின்மேல் அதிக பக்தி வைத்து சகல அவசரங்களிலும் நம்பிக்கையுடன் அவர்கள் சலுகையைத் தேடுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். அலிப்பியுஸ், மே. 
அர்ச். அர்நூல், து. 
அர்ச். மாக்கார்ட்டின், து.