அக்டோபர் 15

அர்ச். தெரேசம்மாள் - கன்னிகை (கி.பி. 1582) 

உயர்ந்த கோத்திரத்தாளான தெரேசம்மாள் தன் பக்தியுள்ள தாயாரால் தர்ம வழியில் கவனத்துடன் வளர்க்கப்பட்டாள். அவள் அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரத்தை வாசிக்கக் கேட்டு, அவளுக்கு 7 வயது நடக்கும்போது வேதசாட்சி ஆக வேண்டுமென்று விரும்பி, ஆப்பிரிக்கா தேசத்திற்கு ஓடிப் போகும்போது, அவள் உறவினர்கள் அவளை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள். 

தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறு குடிசை போட்டு, அதில் வனவாசியைப் போல் ஜெப தபங்களைச் செய்து வந்தாள். இவள் கதைப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியதால், இவளுடைய பக்தி குறைந்து போயிற்று. தன் தவறைக் கண்டுகொண்டு புண்ணிய வழியில் நடக்க கார்மேல் மடத்தில் சேர்ந்தாள். 

துவக்கத்தில் நல்ல வஸ்திரங்களை உடுத்த ஆசித்தும் உலக செய்திகளை கேட்கவும் மடத்து வாசற்படியில் வெகு நேரம் செலவழித்ததால் அவளுக்கிருந்த பக்தி பற்றுதலை இழந்து ஞானவறட்சிக்குள்ளானாள். 

இவள் இந்த தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிட்டால் பெரும் பாவங்களுக்குள்ளாகி நரகத்திற்குப் போகவிருப்பதை சர்வேசுரனால் அறிந்து, அப்படிப்பட்ட துர்ப்பழக்கங்களை விட்டுவிட்டு புண்ணிய வழியில் நடந்து, கடின தவம் அடங்கிய புது மடங்களை ஸ்தாபித்து, அதில் உத்தமியாய் நடந்து மற்ற கன்னியரையும் புண்ணியவதிகளாக்கினாள். 

அர்ச். சூசையப்பரைப் பக்தியுடன் வேண்டிக்கொண்டு அவர் உதவியால் தன் முயற்சியில் அனுகூலமடைந்தாள். தெரேசம்மாள் தன்னைத் தாழ்த்தி, நீச வேலைகளைச் செய்து, தவத்தால் தன்னை அடக்கி, ஒறுத்து, இடைவிடாமல் ஜெபஞ் செய்து, உத்தமதனத்தில் அதிகரித்தாள். 

இவள் மூலமாய் சர்வேசுரன் அநேக புதுமைகளைச் செய்தார். கடின வியாதியிலும் ஒழுங்கை அனுசரித்து, அரிதான புண்ணியங்களைச் செய்து, தனது 67-ம் வயதில் தன் தேவ பத்தாவின் அரவணைப்புக்குள்ளானாள்.

யோசனை 

துறவிகள் உலக செய்தி சம்பாஷணைகளை விலக்காவிட்டால் பெரும் ஆத்தும நஷ்டத்திற்குள்ளாவார்களென்று தெளிவாய் கண்டுகொள்வார்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். தேக்ளா , க. 
அர்ச். ஆஸ்பீசியஸ், மு.