ஏப்ரல் 15

அர்ச். கொன்சாலெஸ் இராயப்பர். துதியர் (கி.பி. 1246)

உயர்ந்த கோத்திரத்தாரான இவர் சுபாவத்தில் புத்திசாலியானதால் மேலான சாஸ்திரங்களைச் சுலபமாகக் கற்றுணர்ந்து கானன் என்னும் கெளரவப் பட்டத்திற்கு உயர்த்தப்பட்டார்.

இவரிடத்தில் பாவத் துர்ப்பழக்கம் இல்லா விடினும் உலக வாழ்வில் பிரியம் கொண்டு, பெருமை சிலாக்கியத்துடன் ஒரு குதிரைமேல் ஏறி சிறந்தப் பரிவாரத்துடன் தமது வேலையை ஏற்றுக்கொள்ளச் செல்கையில், குதிரையிலிருந்து கீழே சேற்றில் விழுந்தார்.

உடனே தனது தவறை அறிந்து ஜெப தபத்தால் தேவ சித்தத்தை உணர்ந்து, அர்ச். தோமினிக் சபையில் சேர்ந்தார். அவர் மடத்தில் ஜெபத் தியானத்திலும் கடுந் தபத் திலும் 7 வருடம் செலவழித்து ஊரூராயும் கிராம கிராமமாயும் சென்று வேதம் போதித்தார்.

இவருடைய பிரசங்கத்தில் மனந்திரும்பின் பெரும் பாவிகளுக்கு கணக்கில்லை .

ஒரு வேசி இவரைப் பாவத்தில் இழுக்கும் கருத்துடன் வியாதி யாய் இருக்கும் தன்னைப் பார்க்க வரும்படி கபடமாய் கேட்டுக்கொண்டாள்.

இவர் அங்கு சென்று அவளுடைய துஷ்டக் கருத்தை அறியவே, அருகிலுள்ள அறைக்கு அவளை வரச்சொல்லி, அங்குள்ள அடுப்பின் நெருப்பை வெளியே தள்ளி அதில் படுத்துக்கொண்டார்.

நெருப்பால் அவர் சுடப்படாததை அவள் கண்டு மனம் மாறி அவரிடம் மன்னிப்புக் கேட்டாள். அர்ச்சியசிஷ்டவர் தமது வேலையை விடாமல், பாவத்தால் நிரப்பப்பட்ட ஊர்களைத் தமது புத்தியுள்ளப் பிரசங்கத்தால் உத்தம கிறீஸ்தவ ஊர்களாக மாற்றினார்.

மேலும் இவர் செய்தப் புதுமைகளைக் கண்ட அநேக முகம்மதியர் ஞானஸ்நானம் பெற்றார்கள். அர்ச். கொன்சாலெஸ் குறித்த நாளில் பாக்கியமான மரணமடைந்தார்.

யோசனை 

நாமும் கர்வமென்னும் மகா பாவத்தை வெறுத்து தாழ்ச்சியுள்ளவர்கள் ஆவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பசிலிஸாவும் அனஸ்தாசியாவும், வே.
அர்ச். பாதெனுஸ், மே.
அர்ச். மண்ட், ம.
அர்ச். ருவாடன், ம.