அர்ச். பீற்றரும், துணைவரும். வேதசாட்சிகள் (கி.பி. 250)
வேதக்குழப்பம் நடக்கும்போது புண்ணியவாளரான பீற்றர் வேதத்திற்காக பிடிபட்டு அதிகாரிக்கு முன் நிறுத்தப்பட்டு வீனஸ் என்னும் தேவதைக்குப் பலியிடும்படி கட்டளையிடப்பட்டார்.
சத்திய கடவுளை வணங்குவேனேயன்றி பாவ அக்கிரமங்களைக் கட்டிக்கொண்ட ஒரு வேசியை வணங்க மாட்டேன் என்று அவர் சொல்ல, அதிகாரி கோப வெறிகொண்டு அவரைச் சக்கரத்தில் கட்டி சித்திரவதை செய்யும்படி கட்டளையிட்டான்.
அவ்வாறே வேதசாட்சியை சேவகர் உபாதிக்கும்போது, அவருடைய எலும்புகள் முறிந்து கொடிய வாதைப் பட்டார். பிறகு அவரைச் சிரச்சேதம் செய்தார்கள்.
வேறு அநேக கிறிஸ்தவர்கள் வேதத்தினிமித்தம் வாதைப்படும்போது, ஒருவன் பயந்து வேதத்தை மறுதலிக்க உடனே அவன்மேல் பசாசு ஆவேஷமாக ஏறி நிர்ப்பாக்கியனாய்ச் செத்தான்.
16 வயதுள்ள தெனிசாள் என்னும் பெண் பயமின்றி அதிகாரியை அணுகி அவன் கிறீஸ்தவர்களை வாதித்துக் கொல்வதைப்பற்றி அவனைக் கண்டித்தாள்.
அவள் கிறீஸ்தவளென்று அறிந்த அதிபதி அவளை விபச்சாரியின் வீட்டுக்கு அனுப்பினான். அன்றிரவு ஜோதிப்பிரகாசத்துடன் ஒரு வாலன் அவ்வீட்டில் தோன்றவே அங்கிருந்த அனைவரும் அதைக் கண்டு பயந்தார்கள்.
அதைப் பார்த்த தெனிசாள், அங்கிருந்தவர்களை நோக்கி, பயப்படாதேயுங்கள், இவர் என் காவல் சம்மனசானவர் என்று தைரியமாய்க் கூறினாள்.
மறுநாள் மற்ற வேதசாட்சிகளைக் கொலைஞர் கொலைக்களத்திற்கு கூட்டிக்கொண்டு போன பின் தெனிசாள் சிறையினின்று தப்பித்துப் போய் வேதசாட்சிகளைப் பார்த்து, நானும் உங்களுடன் மோட்சத்திற்குப் போக ஆசையாயிருக்கிறேன் என்று கூறியதை அதிபதி கேட்டு மற்ற வேதசாட்சிகளுடன் தெனிசாளையும் சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டான்.
யோசனை
வேதசாட்சிகள் உலகத்திற்குச் செத்தபடியால் வேதனைகளைப் பொறுமையுடன் அனுபவித்தார்கள். நமக்கு உலக நன்மைகள் மட்டிலுள்ள பற்றுதல்களை விட்டொழித்தாலன்றி ஞானப் பாக்கியத்தைக் கைக்கொள்ள மாட்டோம்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். டிம்ப்னா , க.வே.
அர்ச். ஜெனெபிரார்ட், வே.