அர்ச். ஆரோக்கியநாதர் - துதியர் (14-ம் யுகம் )
ராக் அல்லது ஆரோக்கியநாதர் என்பவர் பிரான்ஸ் தேசத்தில் புண்ணியவாளரும் தனவந்தருமான தாய் தந்தையிடமிருந்து பிறந்தார். சிறு வயதில் இவர் ஒறுத்தல் முயற்சியாலும் ஜெபத்தாலும் ஏழைகள் மட்டில் காட்டிய இரக்கத்தாலும் அர்ச்சியசிஷ்டவராகக் காணப்பட்டார்.
இவருடைய பெற்றோர் இறந்தபின் தமக்கிருந்த திரண்ட ஆஸ்தியை தான தர்மத்தில் செலவிட்டு, ஏழைக் கோலத்துடன் உரோமைக்குத் திருயாத்திரையாகப் புறப்பட்டார்.
இவர் போகும் வழியிலுள்ள பட்டணங்களில் கொள்ளை நோய் உண்டாயிருந்தபடியால், அவ்விடங்களில் தங்கி, வியாதிக்காரருக்கு உதவி ஒத்தாசை செய்து, அநேகரைப் புதுமையாகக் குணப்படுத்தினார்.
இவர் உரோமாபுரியை அடைந்து மருத்துவமனைகளுக்குச் சென்று வழக்கம் போல் அவர்களுக்கு உதவி செய்யும்போது இவரும் அந்த வியாதியால் பீடிக்கப் பட்டார். அதனால் உண்டாகிய வேதனையைப் பொறுமையுடன் சகித்தார்.
ஆனால் நோயின் கொடுமையால் அவர் அடிக்கடி சத்தமாய்க் கத்தியதினால் மருத்துவமனை அதிகாரிகள் அவரை வீதியில் கிடத்தி விட்டார்கள். அவர் அங்கிருந்து நகர்ந்து நகர்ந்து அருகிலிருந்த காட்டுக்குச் சென்று ஒரு மரத்தடியில் படுத்துக்கொண்டார்.
நாள்தோறும் ஒரு நாய் கொண்டுவந்த ரொட்டியைத் தின்று சில காலத்திற்குள்ளாக குணமடைந்து தேவ உதவியால் தன் சுயதேசத்திற்குப் புறப்பட்டார். அத்தேசத்தில் யுத்தம் நடந்து வந்ததால் அந்நாட்டு அதிபதியான அவருடைய சிற்றப்பன் அவரை உளவாளி என்று எண்ணிச் சிறையில் வைத்தான்.
அவ்விடத்தில் ஐந்து வருடகாலம் துன்பப்பட்டு மரித்தார். மரித்தவுடனே சிறையில் அதிசயப் பிரகாசம் ஜொலிப்பதையும் “கொள்ளைநோய் கண்டு, ஆரோக்கியநாதரின் மன்றாட்டின் உதவியை கேட்பவர்கள் குணப்படுவார்கள்” என்னும் வாக்கியம் எழுதப்பட்ட ஒரு பலகை அங்கு காணப்பட்டதையும் கண்டவர்கள் அதிசயப்பட்டார்கள்.
அதிபதி அவர் இன்னாரென்று அறிந்து அவரை நல்லடக்கஞ் செய்தான். இவர் மன்றாட்டால் இந்நாள் வரைக்கும் அநேக புதுமைகள் நடந்து வருகின்றன.
யோசனை
நமது சரீர வியாதி நீங்கும்படி ஆரோக்கியநாதரை வேண்டிக்கொள்வதுடன், விசேஷமாக நமது ஆத்தும வியாதியாகிய பாவ வியாதி நீங்கும்படி அவரை மன்றாட வேண்டும்.