அர்ச். பிளாவியன். அதிமேற்றிராணியார், வேதசாட்சி (கி.பி. 449)
அர்ச். பிளாவியன், கான்ஸ்தாந்தினோபில் நகரில் குருவாயிருந்தார். இவருடைய மேலான புண்ணியங்களாலும் சாஸ்திரங்களாலும் இராயனின் சிபாரிசினால் மேற்கூரிய நகரில் அதிமேற்றிராணியாராகத் தெரிந்துக்கொள்ளப் பட்டார்.
அக்கோவிலுக்குத் திரண்ட சொத்துக்களிருந்தமையால் அதில் தனக்கு சிலவற்றைக் கொடுக்கும்படி இராயன் அவரைக் கேட்டபோது, கோவில் பொருட்களைக் கொடுப்பதும் வாங்குவதும் பெரும் பாதகமென்று சொல்லி அதை அவனுக்குக் கொடாமற் போனதால், இராயன் பிளாவியன்மட்டில் வெகு கோபமாயிருந்தான்.
மேலும் அக்காலத்தில் இராயனுடைய உறவினனும் ஒரு சந்நியாச மடத்தின் சிரேஷ்டருமான யுட்டிகெஸ் என்பவன் சேசுநாதருடைய மனுஷகத்திற்கு விரோதமாக சில பதிதப் படிப்பினைகளைப் போதிக்கத் தொடங்கினான். அதைப் பிளாவியன் அறிந்து, மறுத்துத் தள்ளிவிட்டார்.
யுட்டிகெஸ் இராயனுடைய அனுமதியின் பேரில் எபேஸ் நகரில் தன் சிநேகிதரான சிலரைச் சங்கமாகச் சேர்த்து தன் படிப்பினையைச் சோதிக்கும்படி செய்தான். அந்தக் கள்ள சங்கத்தார் பிளாவியனையும், அவரைச் சேர்ந்த மேற்றிராணிமாரையும் பேசவிடாமல் தடுத்து, பிளாவியன் அதிமேற்றிராணியாரை அடித்து உதைத்து வாதித்தனர்.
கொடுங்கோலனுடைய அநியாய உத்தர வினால் அர்ச். பிளாவியன் நாடுகடத்தப்பட்டு அவ்விடத்தில் வேதத்திற்காக மரணமாகி வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
கோவில் பொருளை அபகரிப்பது பெரும் பாதகமானதால், அதை அபகரிக்கக் கூடாது. அபகரிக்கிறவர்களுடன் சேரவுங் கூடாது.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். தெயதுலுஸும் துணை. வே.
அர்ச். சில்வின், மே.து.
அர்ச். லோமன், மே.து.
அர்ச். பின்டன், ம.