ஏப்ரல் 17

அர்ச். ஸ்டீபன். மடாதிபதி (கி.பி. 1134) 

ஸ்டீபன் கல்வி கற்கும்படி ஒரு சந்நியாச மடத்திற்கு அனுப்பப்பட்டு, உலகக் கல்வியிலும் ஞானப்படிப்பினையிலும் சிறந்து விளங்கினார்.

இவர் இவ்வுலக இன்பங்களைப் புறக்கணித்து புண்ணிய வாழ்வில் உயர்ந்து சர்வேசுர னுக்கு உத்தமமாக ஊழியஞ் செய்யத் தீர்மானித்து மகா கடின சபையாகிய சிஸ்டேர்சியன் சபையில் சேர்ந்தார்.

இம்மடத்தில் வாழ்ந்துவந்த சந்நியாசிகள் துவக்கத்தில் ஒழுங்குகளை சீராய் அநுசரித்து கடின வேலைச் செய்து அருந் தவம் புரிந்தார்கள்.

இருந்தபோதிலும் அவர்களுக்கு கிடைத்த மிதமிஞ்சின தருமத்தால் மடத்தின் ஒழுங்கில் தளர்ச்சியடைந்து தர்ம காரியங்களில் அசமந்தங் கொண்டார்கள்.

இதைக் கண்ட சிரேஷ்டர் அவர்களுக்குச் சொன்ன புத்திமதிகள் எல்லாம் வீணாய்ப் போனதால் சிரேஷ்டரான அர்ச்.ராபர்ட்டும், ஸ்டீபனும் வேறு சில சந்நியாசிகளும் அம்மடத்தை விட்டு வேறு இடத்திற்குப் போய் ஒரு மடம் ஸ்தாபிக்கவே, அதற்கு அர்ச். ஸ்டீபன் மடாதிபதியானார்.

புது மடத்தில் சந்நியாசிகள் எவ்வளவு கடினமாக உழைத்தும் பல நாள் அவர்கள் பசியும் பட்டினியுமாக இருக்கும்படி நேரிட்டது.

மடத்திலிருந்த 3 காசை ஒரு சகோதரர் கையில் கொடுத்து 3 வண்டி தானியம் வாங்கி வரும்படி சிரேஷ்டர் கூறினார். அவர் கூறியபடியே சகோதரர் கடைக்குப் போனபோது, அவர் பசியால் இளைத்துக் களைத்திருப்பதைக் கண்ட ஒருவன் அவருக்கு வேண்டிய பணத்தைக் கொடுக்க 3 வண்டி தானியத்தை வாங்கி வந்தார்.

கொள்ளை நோயால் சந்நியாசிகள் ஒருவருக்குப்பின் ஒருவராக சாகிறதைக் கண்ட அர்ச். ஸ்டீபன் தமது கண்டிப்பான குணம் சர்வேசுரனுக்குப் பிரியப்படாததால் இப்பேர்ப்பட்ட நஷ்டம் உண்டாகிறதென்று நினைத்துக் கலங்கினபோது வாலிபரான அர்ச். பெர்நார்தும் வேறு 30 பிரபுக்களும் தமது மடத்தில் சந்நியாசம் புரிய வந்ததையறிந்து சந்தோஷித்து மகிழ்ந்தார்.

இந்தக் கடின சபை தேச மெங்கும் பரவி திருச்சபைக்கு ஒரு ஆபரணம் போல பிரகாசித்து வருகிறது. அர்ச். ஸ்டீபன் தம்முடைய முதிர்ந்த வயதில் அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.

யோசனை 

தங்கள் மடத்தின் ஒழுங்குபடி நடக்கும் துறவிகள் மெய்யாகவே பாக்கியவான்கள். ஒழுங்கை அசட்டை பண்ணுகிறவர்கள் மெய்யான துறவிக ளல்ல. இப்பேர்ப்பட்டவர்கள் மடம் புண்ணியத்தில் விருத்தியடையாது.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். அனிசெதுஸ், பா.வே.