அர்ச். ஹெட்விஜெஸம்மாள் - விதவை (கி.பி. 1243)
இராஜ கோத்திரத்தாளான ஹெட்விஜெஸம்மாள் சிறு வயதில் ஒரு கன்னியாஸ்திரி மடத்திற்கு அனுப்பப்பட்டு, அவ்விடத்தில் ஞானக் கல்வியையும் உலகக் கல்வியையும் கற்று வந்தாள். அவளுக்கு 12 வயது நடக்கும்போது போலந்து தேசத்தில் ஒரு பெரிய பிரபுவை மணமுடித்துக்கொண்டாள்.
தனக்கு சர்வேசுரன் கொடுத்த குழந்தைகளை தர்ம வழியில் கவனத்துடன் வளர்த்து வந்தாள். இவள் தன் கணவனுக்கு கூறிய அறிவுரையை அவர் கேட்டதின் பேரில், இருவரும் 30 வருட காலம் கூடப்பிறந்தவர்களைப் போல ஜீவித்து விரத்தராய் புண்ணிய வழியில் நடந்தார்கள்.
தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே அவருடைய உத்தரவு பெற்று ஹெட்விஜெஸம்மாள் ஒரு கன்னியர் மடத்தில் சேர்ந்து, உத்தமியாய் வாழ்ந்தாள். கணவன் இறந்தபின் அர்ச்சியசிஷ்டவள் உலகத்தை முற்றிலும் துறந்து, துறவற வார்த்தைப்பாடு கொடுத்து, புண்ணிய வழியில் உயர்ந்தாள்.
நாள்தோறும் ஒருசந்தி பிடித்து அநேக திவ்விய பூசைகளைக் கண்டு, கடின தவத்தால் தன்னை அடக்கி ஒறுத்து சகலருக்கும் நன்மாதிரிகையாயிருந்தாள். தான் ஒன்றுக்கும் உதவாத பாவியென்று எண்ணி, ஏழைகளுக்கு முழந்தாளிலிருந்து தர்மங் கொடுத்து, குஷ்டரோகிகளையும் மற்ற பிணியாளிகளையும் அன்புடன் விசாரித்து, அவர்கள் புண்களைக் கழுவி முத்திசெய்வாள்.
பல முறை ஜெப நேரத்தில் பரவசமாவாள். கர்த்தருடைய திருப்பாடுகளைப்பற்றி நினைத்து ஏராளமாய்க் கண்ணீர் சொரிவாள். அநேக புதுமைகளையுஞ் செய்ய வரம் பெற்று, அவள் ஏற்கனவே அறிவித்த நாளில் பாக்கியமான மரணமடைந்தாள்.
யோசனை
நாம் எந்த அந்தஸ்திலிருந்த போதிலும் தேவ அழைப்புக்குக் காது கொடுத்து அந்த அந்தஸ்தின் கடமைகளைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றுவோமாகில் தவறாமல் நித்திய சம்பாவனையைப் பெறுவோம்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ஆன்ஸ்ட்ரு , க.
அர்ச். ஆன்ட்ரு , வே.