மார்ச் 17

அர்ச். பேட்ரிக். மேற்றிராணியார் (கி.பி. 464). 

இவர் சிறு பிள்ளையாயிருக்கும் போது மூன்று தடவை கடற் கொள்ளைக்காரர்களால் பிடிக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்டு, ஆடு மாடுகளை மேய்த்து வந்தார்.

அவ்வேலையைச் செய்யும் போது அடிக்கடி ஜெபம் செய்து அநேகத் தடவை தன்மேல் சிலுவை வரைந்துகொள்வார்.

இவருக்கு விடுதலைக் கிடைத்தபின் வேதசாஸ்திரங்களைக் கற்று குருப்பட்டம் பெற்றார்.

பரிசுத்த பாப்பரசருடைய அனுமதியின் பேரில் இவர் மேற்றிராணியாராக அபிஷேகம் பெற்று, அயர்லாந்து தேசத்திற்குப் போய் வேதத்தைப் போதித்தார்.

இவருடைய பக்தியுள்ள ஜெபத்தாலும் கடுந் தபத்தாலும் உருக்கமுள்ள பிரசங்கத்தாலும் மன்னர்களையும், கணக்கற்ற பிரஜை களையும் சத்திய வேதத்தில் சேர்த்துக்கொண்டார்.

அந்தத் தேசமெங்கும் சத்திய வேதம் பரவியபடியால் அவர் அநேக கன்னியர் மடங்களையும், சந்நியாச மடங்களையும் கட்டி வைத்தார்.

தேவாலயங்களைக் கட்டி எழுப்பினார். அநேகருக்குக் குருப்பட்டம் கொடுத்து வேதம் போதிக்கும்படி கற்பித்தார்.

அநேக மேற்றிராசனங்களை ஏற்படுத்தி, அங்கு மேற்றிராணி மார்களை அனுப்பினார்.

அர்ச். பாப்பானவர் பேட்ரிக்குடைய செய்கைகளைப் பற்றி கேள்விப்பட்டு அவரை அயர்லாந்து தேசத்திற்கு அதிசிரேஷ்ட மேற்றிராணியாராக ஸ்தாபித்தார்.

அத்தேசத்திலுள்ள பாம்பு முதலிய விஷ ஜந்துக்களை அவ்விடத்தினின்று அப்புறப்படுத்தினார்.

பேட்ரிக் அஞ்ஞானத்தில் மூழ்கியிருந்த அயர்லாந்தை உத்தம கிறீஸ்தவ தேசமாக்கி, புண்ணிய வாழ்க்கையில் உயர்ந்து, முதிர்ந்த வயதில் பாக்கியமான மரணமடைந்தார்.

இவர் போதித்த சத்திய விசுவாசத்தைக் கைக்கொண்ட அயர்லாந்து தேசத்தார் இந்நாள் வரைக்கும் அதை ஒரு பெரும் பொக்கிஷமாகக் காப்பாற்றி வருகிறார்கள்.

யோசனை

நாமும் சகல துன்பத்துரிதங்களிலும் கஷ்ட நஷ்டங்களிலும் சத்திய விசுவாசத்தைப் பெரும் பொக்கிஷமாகக் காப்பாற்றுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அலெக்சாந்திரியாவின் வேதசாட்சிகள்
அர்ச். ஜெர்ட்ரூட், க.