அர்ச். நிகாண்டரும் துணைவரும். வேதசாட்சி (கி.பி.303)
நிகாண்டர், மார்சியன் ஆகிய இவ்விருவரும் உரோமை இராணுவத்தில் பணியாற்றி வந்தார்கள். வேத கலகமுண்டானபோது அவ்விருவரும் பட்டாளத்தை விட்டு விலகினார்கள்.
இதையறிந்த அவ்வூர் அதிபதி அந்த இருவரையும் வரவழைத்து விக்கிரகங்களுக்கு தூபங்காட்டும்படி கட்டளையிட்டான்.
வேதசாட்சிகளோவெனில் மெய்யான சர்வேசுரனை மாத்திரம் வணங்குவோமே தவிர பொய்த் தேவர்களை வணங்க மாட்டோம் என்று தைரியமாகக் கூறினார்கள்.
அந்நேரத்தில் நிகாண்டருடைய மனைவி தன் கைக் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு என் கணவனாகிய எஜமானே, நாமிருவரும் சத்திய தேவனுடைய பிள்ளைகளானதால் அவரை மறுதலியாதேயும். அவர் உமக்கு நித்திய சம்பாவனையைக் கட்டளையிடுவாரென்று தன் கணவனுக்கு ஆறுதல் சொன்னாள்.
மார்சியனுடைய மனைவியும் மற்ற உறவினர்களும் வேதசாட்சியை அணுகி கத்திக் கதறி ஒப்பாரி வைத்து, சத்திய வேதத்தை மறுதலிக்கும்படி துர்ப்புத்தி சொன்னார்கள்.
இரு வேதசாட்சிகளும் சற்றும் அஞ்சாமல் வேதத்தில் உறுதியாயிருந்ததினால் அவர்கள் தலையைத் துண்டிக்க தீர்ப்பு பெற்றார்கள். நிகாண்டருடைய மனைவி தன் கணவன் வேதசாட்சியாகிப் பரகதி சேரவிருப்பதால் சந்தோஷித்து சர்வேசுரனுக்கு நன்றி கூறி, கொலைக்களத்துக்கு தன் கணவனைப் பின்சென்றாள்.
வேதசாட்சிகள் கொலைக்களம் போய்ச் சேர்ந்தபின் அவர்கள் கண்கள் கட்டப்பட்டுத் தலை வெட்டப்படவே, அவர்கள் ஆத்துமங்கள் முடிவில்லா மோட்ச ஆனந்தத்திற்குள் சென்றன.
யோசனை
ஸ்திரீ பூமான்கள், திருமண உறவால் ஒரே சரீரமாகி அன்னியோன்னியமாய் நேசிக்கக் கடமைப்பட்டு, உலக விஷயத்தில் மாத்திரமல்ல, விசேஷமாக ஞான விஷயத்திலும் ஒருவருக்கொருவர் துணையாயிருப்பார்களாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். போடுல்ப், ம.
அர்ச். அவிதுஸ், ம.