ஆகஸ்ட் 17

அர்ச். இயசிந்த் - துதியர் (கி.பி. 1287) 

போலந்தில் இவர் உத்தம கோத்திரத்தில் பிறந்து சகல சாஸ்திரங்களையும் கற்றபின் குருப்பட்டம் பெற்றார். இவருடைய பக்தி, புத்தியையும் ஜெபத்தையும் கண்ட அவருடைய மேற்றிராணியார் இயசிந்தை தமக்கு உதவி குருவாக நியமித்துக்கொண்டார். 

பெயர்பெற்ற அர்ச். தோமினிக் என்பவரின் புண்ணியங்களையும் புதுமைகளையும் கண்ட இயசிந்த் அர்ச். தோமினிக் சபையில் சேர்ந்து விரைவில் அர்ச்சியசிஷ்டதனத்தில் உயர்ந்தார். 

தோமினிக்கின் உத்தரவுப்படி இயசிந்த், ரஷ்யா முதலிய தேசங்களில் சத்திய வேதம் போதித்துத் திரளான அஞ்ஞானிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததினால் அவர்கள் உத்தம கிறீஸ்தவர்களானார்கள். மேலும் அந்த இடங்களில் இயசிந்தின் முயற்சியால் அநேக துறவற மடங்கள் உண்டாயின. 

இவருடைய புண்ணியங்களாலும் ஜெபதபங்களாலும் புதுமை வரம் பெற்று, மரித்தவர்களை எழுப்பி, வியாதியஸ்தரைக் குணப்படுத்தி அதிசயங்கள் செய்ததைக் கண்ட லட்சக்கணக்கான அஞ்ஞானிகள் மனந்திரும்பினார்கள். 

பாவிகள் புண்ணிய வான்களானார்கள். விரோதிகள் சமாதானமாய் போனார்கள். ஒருநாள் இவர் கோவிலில் பூசை செய்துகொண்டிருக்கையில் டார்ட்டார் என்னும் துஷ்டர்கள் அப்பட்டணத்திற்கு நெருப்பு வைத்ததினால் அப்பட்டணம் நெருப்பால் வேகும் போது இயசிந்த் பூசை முடித்து தேவநற்கருணையடங்கிய பாத்திரத்தை கையிலெடுத்துக்கொண்டு ஓடிப்போகையில் பீடத்திலிருந்த தேவமாதா சுரூபம் வாய் திறந்து: “மகனே என்னையும் எடுத்துக்கொண்டு போ” என்றதைக் கேட்ட அவர் மிகவும் பளுவான அந்த சுரூபத்தை எடுத்த மாத்திரத்தில் அது தக்கை போல இலேசாயிருந்தது. 

இவர் தேவமாதா மோட்சத்திற்குப் போன திருவிழா அன்று பூசை செய்து பீடத்தினடியில் அவஸ்தை பெற்று மரித்து மோட்சத்திற்குப் போனார்.

யோசனை 

நாம் தேவதாயார்மீது மெய்யான பக்தி வைப்போமாகில் நித்தியத்திற்கும் கெட்டுப்போக மாட்டோம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். மாமாஸ், வே. 
அர்ச். லிபராதுஸும் துணை., வே.