அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 18

அர்ச்.சூசையப்பர் நாசரேத்தூரில் வசித்ததை தியானிப்போம்

தியானம்

அர்ச்.சூசையப்பர் தான் வாழ்ந்த நாள்களில் தச்சு வேலை செய்து மாமரியன்னையையும், சேசுவையும் பேணி காப்பாற்றி வந்தார் சகல ஆற்றல்மிக்க சர்வேசுரன்  அர்ச்.சூசையப்பரை வளர்ப்பு தந்தை யாகவும், வானதூதர்களைவிட உயர்வாகவும் படைத்தார். ஆனால் உலகில் உள்ள மனிதர்களுக்கு வழங்கப்படும் செல்வ சுகங்களை அவருக்கு வழங்கவில்லை. இஸ்ராயேல் மக்களுக்கு காட்டில் உணவு அளித்ததுபோல இந்த ஏழை குடும்பத்திற்கு உணவு அளிக்கவில்லை வேலைசெய்து பிழைப்பதுதான்  அர்ச்.சூசையப்பருக்கு அளிக்கப்பட்ட வல்லமை. அதனால் திருக்குடும்பம் உழைத்து, வேர்வை சிந்தி பாடுபட்டு தங்களுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள் குடும்பத்தின் தலைவராக அர்ச்.சூசையப்பர் இருந்ததால் அதிகமாக உழைத்தார். இரவில் விளக்கு வைத்து வேலை செய்தும்கூட சிலநாட்களில் அவர்களுக்கு உணவு பற்றாக்குறை இருந்ததுண்டு.

இத்தகைய சூழ்நிலையிலும்கூட அர்ச்.சூசையப்பர் குறையோ முறையீடோ செய்ததில்லை. இது போதும் என்ற மனநிறைவோடு இருந்தார். அவர் செல்வந்தர்களுடைய ஆஸ்தியையோ, நல்ல உடைகளையோ, நல்ல உணவையோ நினைத்து பார்த்ததில்லை. தேவ சித்தத்திற்கு கட்டுப்பட்டு தன்னுடைய நிலைக்கேற்ற வேலையினை செய்து புண்ணியங்களிலே வளர்ந்து இடைவிடாது சர்வேசுரனுக்கு புகழ்பாடி வந்தார்

எத்தகைய நிலையிலும் செபிக்க மறந்ததில்லை. வேலையினூடே செபித்துக் கொண்டிருப்பார். திருக்குடும்பமே வேலை செய்துதான் வாழ்க்கையை நடத்தி வந்தது. சகல உலகங்களை படைத்து, ஆக்கவும் அழிக்கவும் வல்லவரான சேசு நமக்கு நன்மாதிரியாகவும், நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும் வேலை செய்துவந்தார். மாமரியன்னையோ பஞ்சிலிருந்து நூல் நூற்று, சேலை மற்றும் துணிகள் தைத்தும் உழைத்தார்கள் ஆனால் திருக்குடும்பமோ இடைவிடாது சர்வேசுரனைப் புகழ்ந்து பாடிக்கொண்டே இருந்தனர். பாவிகள் மனம்திரும்பவே இத்தகைய செயல்களை செய்துவந்தனர்.

கிறிஸ்தவர்களாகிய நாமும் நினைவால் நாசரேத் ஊருக்குச் சென்று அங்கு நடந்தவற்றினை பார்த்து நமக்கு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்கோ, நமது பிள்ளைகளுக்கு ஒரு வேலை தேட நினைத்தால் கௌரவமான தொழிலாகவும் அதிக வருமானம் தரக்கூடியதாகவுமே தேடுவோம். ஆனால் சர்வேசுரன் தன்னுடைய மகனுக்கும் அவரது வளர்ப்பு தந்தைக்கும் இத்தகையதொரு தொழிலை நிர்ணயித்தார். நாமும் நமது தகுதிக்கு மேற்படாத தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்

அர்ச்.சூசையப்பர் தன்னுடைய நிலையினை அவ்வாறே ஏற்றுக் கொண்டு சர்வேசுரனுக்கு புகழ் பாடி வந்தார். நாம் சாப்பிடும் போதும் தூங்கும்போதும் சர்வேசுரனுக்கு ஏற்புடையவர்களாக இருக்க செபிக்க வேண்டும் என அர்ச்.சின்னப்பர் குறிப்பிடுகிறார். நாம் எதைச் செய்தாலும் ஆண்டவருக்கு ஏற்புடையதாகவும் புகழ் பரப்பும் விதத்திலும் இருக்க வேண்டும்

புதுமை

ரோம்மா நகரின் நடுவில் உள்ள கப்பித்தோலினூஸ் என்ற கோட்டையின் அடிவார கீழ்ப்பக்கத்தில் பிதா பிதாவாகிய அர்ச். சூசையப்பர் பெயரால் பிரபலமான ஆலயம் ஒன்று இருந்தது. அப்பகுதியில் உள்ள தச்சர்கள் ஒன்று கூடி தங்களுடைய சொந்தபணத்தில் ஆலயம் கட்டி ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடி சிறப்பித்து வந்தனர். அவ்வாலயம் தச்சருடைய அர்ச்.சூசையப்பர் ஆலயம் என அழைக்கப்படுகிறது. அர்ச்.சூசையப்பரின் பெயரால் பாப்பரசரின் அனுமதியின் பேரில் இவ்வாலயத்தில் ஒரு பக்த சபை தொடங்கப்பட்டது. இச்சபையில் சேர்ந்து செபிப்பவர்களுக்கு  அர்ச்.சூசையப்பரின் விசேஷ நன்மைகள் கிடைக்கின்றது

இவ்வாலயத்தின் கீழ் அர்ச். இரயப்பரும், அர்ச்.சின்னப்பரும் மறைசாட்சிகளாக இறக்கும்முன் ஒன்பது மாதம் அடைத்து வைத்திருந்த சிறைச்சாலை இருக்கிறது. இந்த சிறைச்சாலை பெரிய பாறையில் வெட்டப்பட்டு தரைக்கு கீழே இருபது முழம் ஆழமிருக்கிறது.

இந்த சிறையில் இருந்தபோது அர்ச்.இராயப்பர் சிறைக்காவலரையும் அவரோடு அடைபட்டிருந்த நாற்பது குற்றவாளிகளையும் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றினார். அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்க தண்ணீர் இல்லாததால் கடும் பாறையில் நின்று நீரூற்றுப் புறப்படச் செய்து அவர்களுக்கு திருமுழுக்கு அளித்தார். இன்றும் அந்நீரூற்று இருக்கிறது இந்த அற்புத நீரூற்றிலிருந்து நீர் எவ்வளவு எடுத்தாலும் குறையாது எடுக்காவிட்டாலும் மிகுந்து போகாது

இந்நீரால் பற்பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. இங்குள்ள ஆலயத்தின் கிரீடம் மிக அற்புதமாக கட்டப்பட்டிருப்பதால் அதிலே திருப்பலி நிறைவேற்ற விரும்பி வேண்டுதலுடன் வெளி இடங்களில் இருந்து அருட்பணியாளர்கள் வருகிறார்கள். அர்ச்.இராயப்பரை கொலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது ஒரு கொடிய காவலாளி அவரை கொடுமையாக தள்ளிய போது அவரது தலை பாறையிலே மோதியது. தலை மோதிய பகுதி இளகி அதிலே அவரது சிரசின் அடையாளம் பதிந்திருப்பதை இப்போதும் நாம் காணலாம்

நாம் எந்த நிலையில் இருந்தாலும் எந்த தொழில் செய்தாலும்  அர்ச்.சூசையப்பரை பாதுகாவலராக வைத்துக்கொள்வோம்

(1பர, 3அரு, திரி)

செபம்

உமது வாழ்நாளில் தச்சுவேலை செய்த பிதா பிதாவாகிய  அர்ச்.சூசையப்பரே! உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்கிறோம் மனிதன் வருந்தி வேலை செய்து உண்ண வேண்டியிருப்பதால் வருத்தத்தோடு வேலை செய்பவர்களுக்கு ஆறுதலாகவும் நன்மாதிரிகையாகவும் இருக்கும்படிக்கு சகல உலகங்களை படைத்து காக்கும் சேசுவே, வேலை செய்ய சித்தமானிரே வேலை செய்பவர்கள் அனைவரும் சேசுவைக் கண்டு பாவித்து சர்வேசுரனின் திருச்சித்தத்துக்கு கீழ்ப்படிந்து தாங்கள் படுகிற துன்பம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள உதவியருளும். செய்யும் தொழிலை சோம்பலின்றி, சுறுசுறுப்புடன் செயலாற்ற, நீர் உதவி செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம்

இன்று சொல்ல வேண்டிய செபம்

தாழ்ந்த நிலையில் இருக்கிறவர்களுக்கு மகிமையான அர்ச்.சூசையப்பரே! உமக்கு புகழ்

வருந்தி வேலை செய்பவர்களுக்கு சந்தோஷம் அளிக்கும்  அர்ச்.சூசையப்பரே! உமக்கு புகழ்

எல்லோருக்கும் நன்மாதிரிகையான அர்ச்.சூசையப்பரே! உமக்கு புகழ் உண்டாவதாக

செய்ய வேண்டிய நற்செயல்

ஏழை தச்சுத் தொழிலாளிக்கு ஏதாவதொரு உதவியை செய்வது