அர்ச். வின்சென்ட் பவுல் - துதியர் (கி.பி. 1660)
ஏழைக் குடும்பத்தில் பிறந்த வின்சென்ட் சிறுவயதில் தன் தந்தையின் கால்நடைகளை காட்டில் மேய்க்கும்போது ஒரு தனியிடத்தில் ஒதுங்கி ஜெபத்தியானம் செய்வார். பிறகு இவர் பள்ளிக்கூடத்தில் படித்துக் கல்வி சாஸ்திரங்களைக் கற்றறிந்து குருப்பட்டம் பெற்றார்.
இவருடைய தாழ்ச்சி, பொறுமை, கீழ்ப்படிதலாகிய புண்ணியங்களினால் சகலரும் இவர் மட்டில் பிரியமாயிருந்தார்கள். இவர் ஒரு தடவை கள்வர் கையிலகப்பட்டு ஆப்பிரிக்கா தேசத்திற்கு கொண்டுபோகப்பட்டு அடிமையாய் விற்கப்பட்டார்.
கிறீஸ்தவனாயிருந்து துலுக்கனாக மாறிய இவருடைய எஜமான் வின்சென்டுடைய யோசனைக்கு இணங்கி அவருடன் அத்தேசத்தை விட்டு பிரான்ஸ் தேசத்திற்கு ஓடிப்போய், மறுபடியும் கிறீஸ்தவனானான். வின்சென்ட் கப்பலிலுள்ள விலங்கிட்டவர்களை கவனிக்கும்படி நியமிக்கப்பட்டார்.
இந்த வேலையை மகா அன்புடன் செய்து, அவர்களுடைய ஆத்தும சரீரத்திற்கு வேண்டிய உதவிகளைப் புரிந்து வந்தார். ஒரு விலங்குக்காரனுடைய சங்கிலியைத் தான் மாட்டிக்கொண்டு அவனைத் தப்புவிக்க செய்தார்.
இரவு வேளையில் பெரிய பட்டண வீதிகளில் சுற்றித் திரிந்து, குரூர தாய்மாரால் வெளியே எறியப்பட்ட குழந்தைகளை எடுத்து பராமரித்து வளர்த்து வந்தார்.
இதற்காக ஸ்திரீகளால் ஒரு சபையை ஸ்தாபித்து அவர்கள் மூலமாய் அநேக குழந்தைகள் இரட்சிக்கப்பட காரணமாயிருந்தார். இவருடைய அரிதானப் புண்ணியங்களினாலும் புதுமைகளாலும் அநேக பாவிகளையும் பதிதரையும் மனந்திருப்பினார்.
ஆத்தும இரட்சண்யத்திற்காக இவர் பட்ட கஷ்ட வேதனைகளாலும் நெடும் பிரயாணங்களினாலும் வியாதியுற்று தமது 85-ம் வயதில் மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
யோசனை
நாமும் ஏழைகளுக்கு உதவி செய்து, சாகக் கிடக்கும் அஞ்ஞானக் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கான வழிமுறைகளைத் தேடுவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். அர்சேனியுஸ், ம.
அர்ச். சிம்மாக்குஸ், பா.
அர்ச். மாக்ரினா, க.