அர்ச். ஜூலியானம்மாள். கன்னிகை (கி.பி. 1340)
பல்கோனியேரி என்னும் வம்ச பெயருள்ள ஜூலியானம்மாள் சிறு வயதிலேயே அர்ச்சியசிஷ்டதனத்தின் அடையாளங்களைக் காட்டத் தொடங்கினாள்.
மற்றப் பிள்ளைகளைப் போல விளையாடாமல் வெகு நேரம் ஜெபத்தில் செலவிடுவாள். பாவத்தின் பெயருக்கே அஞ்சுவாள். முகக்கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவளல்ல. ஆண் பிள்ளைகளையும் ஏரெடுத்துப் பார்த்தவளல்ல.
தவக் காரியங்களால் தன்னை ஒறுத்து புண்ணிய வழியில் வளர்ந்தாள். திருமணத்தை வெறுத்து துறவறத்தில் பிரவேசித்து சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கினாள்.
மேன்குலத்தாரான அநேக பெண்களும் அந்த மடத்தில் சேர்ந்தார்கள். அந்த மடத்தில் ஜூலியானா சிரேஷ்ட தாயாராக நியமிக்கப்பட்ட போதிலும் தாழ்ச்சிக்குரிய வேலைகளைச் செய்து சகலருக்கும் அடிமைபோல் நடப்பாள்.
உலக காரியங்களைப்பற்றி மடத்தில் பேச எவரையும் அனுமதிக்க மாட்டாள். நல்ல சம்பாஷணையால் பாவிகளை மனந்திருப்பி, விரோதிகளைச் சமாதானப்படுத்தி, ஒழுங்கற்றவர்களை ஒழுங்குபடுத்துவாள்.
இரணங்களை தன் நாவாள் நக்கி அவைகளை செளக்கியப்படுத்துவாள். இவள் புரிந்த கடுந்தவத்தால் நோயாளியாகி அதனாலுண்டாகிய வேதனையை பொறுமையுடன் சகித்து சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்பாள்.
இவள் அவஸ்தைப் பூசுதலின் போது வியாதியினிமித்தம் நன்மை வாங்க முடியாமலிருந்தமையால், தேவநற்கருணையைக் கண்ணோக்க, அதைத் தன்னிடம் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டதின் பேரில், குருவானவர் தேவநற்கருணையைக் கொண்டு வந்து அவள் இடது பக்கத்தில் விரிக்கப்பட்ட வஸ்திரத்தின்மேல் அதை வைத்த மாத்திரத்தில், அது காணாமற் போனது. அக்கணமே ஜூலியானா உயிர் துறந்தாள்.
அவளைக் குளிப்பாட்டும் போது அவளுடைய இடது பக்கத்தில் திவ்விய அப்பத்தின் முத்திரை பதிந்திருந்தது. அவள் சாகும்போது சம்மனசுகள் மாடப்புறா வடிவில் காணப்பட்டார்கள்.
யோசனை
துறவறத்தார் ஊராருடைய திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் முதலியவற்றை முடிவு செய்வதும், ஊராருடைய காரியங்களில் தலையிட்டுக் கொள்வதும் தவறாகும்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ஜெர்வாசியூஸும்
ப்ரோத்தாசியூஸும், வே.