கி.பி. 48 - அர்ச். அருளப்பர் மாமரித்தாய் பரலோகத்திற்கு ஆரோபணமாணதைக் கண்டார்.
காட்சி கண்டவர்: செபதேயுவின் மகன் அர்ச். அருளப்பர்.
ஆதாரம்: மரிய வால்டோர்டாவிற்கு தியானங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட நற்செய்தி.
கடவுள் மனிதன் காவியம் பாகம் 1௦, அத்தியாயம் 646.
பரிசுத்த கன்னி மாமரியின் பரலோக ஆரோபணம்
எத்தனை நாட்கள் கடந்து விட்டன? அதைத் தீர்மானிப்பது கடினமாக இருக்கிறது. மாதாவின் திருச்சரீரத்திற்கு சூட்டப்பட்டுள்ள மலர்களைக் கொண்டு அதனைக் கணக்கிட்டால், ஒரு சில மணி நேரம்தான் கடந்திருக்கிறது என்று நாம் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் ஒலிவக்கிளைகளின் மீது விழுந்து கிடக்கிற புது மலர்களையும், ஏற்கனவே சருகாகிப்போன இலைகளைக் கொண்டுள்ள கிளைகளையும், அருளிக்கங்களைப் போல பேட்டியின் மூடியின் மேல் விழுந்து கிடக்கிற மலர்களையும் வைத்து நாம் கணக்கிட்டால், இப்போது சில நாட்கள் கடந்துவிட்டன என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
ஆனால் மாதாவின் திருச்சரீரம், அவர்கள் மரித்த போது எப்படி இருந்ததோ, அப்படியே இப்போதும் இருக்கிறது. மரணத்தின் சுவடு எதுவும் அவர்களது முகத்தின் மீதோ, அல்லது அவரது சிறிய கரங்கள் மீதோ காணப்படவில்லை. அந்த அறையில் துற வாசனை எதுவும் வீசவில்லை. மாறாக, தூபம், லீலி மலர்கள், ரோஜா மலர்கள், பள்ளத்தாக்கின் லீலிகள், மலைப்பூண்டுகள் இவற்றின் வாசனைகள் எல்லாம் கலந்த ஒரு விவரிக்க முடியாத நறுமணம் அந்த அறையின் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது.
அருளப்பர் உறங்கிக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். எத்தனை நாட்கள் அவர் தூங்காமல் விழித்திருந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. களைப்பு மிகுதியால் ஒரு முக்காலியின் மேல் அமர்ந்து அவர் உறங்குகின்றார். அவருடைய தோள்கள் மட்டுப்பா மாடிக்குச் செல்லும் வாசலின் அருகேயுள்ள சுவரின் மேல் சாய்ந்திருக்கின்றன. தரையில் வைக்கப்பட்டிருக்கின்ற விளக்கின் வெளிச்சம் அவர் மேல் விழுந்து, அவரது களைத்துப் போன முகத்தை நான் காணும்படி செய்கிறது. அது மிகவும் வெளுத்திருக்கின்றது. ஆயினும் அவருடைய கண்களைச் சுற்றி கருவளையம் காணப்படுகிறது. அதிகம் அழுததால், அவருடைய கண்கள் சிவந்திருக்கின்றன.
விடியல் மிக அருகில் இருக்கவேண்டும். ஏனென்றால், அதன் மங்கலான ஒளியில் மொட்டை மாடியும், வீட்டைச் சுற்றியுள்ள ஒலிவ மரங்களும் கண்ணுக்குப் புலப்படுகின்றன. நேரம் செல்லச் செல்ல அதிகரித்து வருகின்ற ஒளி, கதவினூடாக ஊடுருவி உள்ளே வருகிறது. முதலில் அறையில் இருந்த சிறிய விளக்கின் வெளிச்சத்தில் அரைகுறையாக மட்டுமே தெரிந்த அந்த அறையில் உள்ள பொருட்கள் இப்போது அதிகாலை வெளிச்சத்தில் தெளிவாகத் தென்படத் தொடங்குகின்றது.
திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி அந்த அறையை நிரப்புகிறது. ஏறக்குறைய பாஸ்போரிக் நீலமும் வெள்ளி நிறமும் கலந்தது போன்ற அந்த ஒளி, படிப்படியாக அதிகரித்து, விடியற்காலையின் வெளிச்சமும், விளக்கின் வெளிச்சமும் மறைந்து போகச் செய்கின்றது. தேவ சுதன் பெத்லகேமின் குகையில் பிறந்த பொழுது, அங்கே பெரும் பிரவாகமாகப் பொங்கிப் பரவிய வெளிச்சத்தைப் போல அது இருக்கின்றது. அதன்பின் இந்த பரலோக ஒளியில், சம்மனசுக்கள் தோன்றுகிறார்கள். அதனால் முன்பிருந்ததைவிட அதிகப் பிரகாசமான வெளிச்சம் இப்பொழுது அறையில் பரவியிருக்கின்றது. இடையர்களுக்கு சம்மனசுக்கள் தோன்றிய போது ஏற்கனவே நிகழ்ந்தது போல, மெதுவாக அசைக்கப்படுகின்ற அவர்களது இறக்கைகளிளிருந்துபல வண்ணங்களிலான ஒளித்துணுக்குகள் புறப்பட்டு அவர்களை சுற்றி நடனமாடுகின்றன. அந்த இறக்கைகளிலிருந்து மனதிற்கு மிக இணக்கமான மெல்லிய ஒலி வெளிப்படுகிறது. யாழ் மீட்டப்படுவதுபோல அத்தனை இனிமையாயிருக்கிறது அந்த ஒலி.
இந்தச் சம்மனசுக்கள் அந்த சிறிய படுக்கையைச் சுற்றி வட்டமாக நின்று, குனிந்து, அசையாமல் இருக்கின்ற மாதாவின் திருச்சரீரத்தைத் தூக்குகிறார்கள். அப்போது அவர்களுடைய இறக்கைகள் இன்னும் வேகமாக அடித்துக் கொள்கின்றன. அதனால் அவற்றிலிருந்து வெளிவரும் ஒலியும் முன்பிருந்ததை விட அதிகரிக்கின்றது. சேசுவின் கல்லறை அற்புதமாகத் திறக்கப்பட்டது போல, வீட்டின் மேற்கூரையில் அற்புதமாக திறக்கப்பட்டிருகின்ற ஒரு பெரிய திறப்பின் வழியாக, தங்கள் பரிசுத்த இராக்கினியின் மிகப் பரிசுத்தமான திருச்சரீரத்தைச் சுமந்துகொண்டு அவர்கள் வெளியேறுகிறார்கள். அது மிகப்பரிசுத்த சரீரம் என்பது உண்மைதான். ஆயினும் அது இன்னமும் மகிமைப்படுத்தப்படவில்லை. ஆதலால் அது பருப்போருளின் இயற்பியல் விதிகளுக்கு இன்னமும் உட்பட்டிருக்கிறது. ஆனால் முன்பு கிறிஸ்துநாதரின் திருச்சரீரம் அந்த விதிகளுக்கு உட்பட்டிருக்கவில்லை. ஏனெனில் மரித்தோரிடமிருந்து அவர் உயிர்த்தெழுந்த போதே அவர் ஏற்கனவே மகிமைப்படுத்தப்பட்டிருந்தார். சம்மனசுக்களின் இறக்கைகளின் ஒலி மேலும் அதிகரித்து, இப்போது ஒரு ஆர்மோனியக் கருவியின் இசையொலியைப் போல அடர்த்தி மிக்கதாக ஆகியிருக்கிறது.
அருளப்பர் இன்னமும் தூக்க மயக்கத்தில் இருக்கிறார். இருந்தாலும் சற்று முன்பு அவர் தம் முக்காலியின் மீது இரண்டு மூன்று தடவை அசைவதைக் காண முடிகிறது. அந்த அடர்த்தியான ஒளியும், சம்மனசுக்களின் இறக்கைகளின் பலத்த சத்தமும் அவரது தூக்கத்தை சற்று கலைத்திருக்க வேண்டும். இப்போதோ அந்த சத்தத்தால் அவர் விழித்துக்கொண்டு விட்டார். திறந்த கூரை வழியே உள்ளே வந்து வாசல் வழியே வெளியேறுகிற காற்று, கடுமையான சுழற்க்காற்றாக உருவெடுக்கிறது. அது இப்போது வெறுமையாயிருக்கிற படுக்கையின் விரிப்புகளையும், அருளப்பரின் ஆடைகளையும் அசைக்கிறது. அக்காற்றில் விளக்கு அணைந்துவிட்டது. கதவு பலத்த சத்தத்துடன் அறைந்து மூடுகிறது.
இன்னமும் அரைத்தூக்கத்தில் இருக்கும் அப்போஸ்தலர், என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக சுற்றிலும் பார்க்கிறார். படுக்கை வெறுமையாயிருக்கிறதையும், வீட்டின் மேற்கூரை திறந்திருப்பதையும் கவனிக்கிறார். ஏதோ அற்புதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறார். ஏதோ ஒரு ஞான உள்ளுணர்வாலோ, அல்லது ஒரு பரலோக அழைப்பினாலோ உந்தப்பட்டவராக அவர் மட்டுப்பாமாடியை நோக்கி வெளியே ஓடி, தலையை உயர்த்திப் பார்க்கிறார். உதித்து வரும் சூரியனின் வெளிச்சத்தால் தம் பார்வை மட்டுப்படாதபடி, சூரிய வெளிச்சத்திலிருந்து கண்களுக்கு கைகளால் நிழல் ஏற்ப்படுத்திக் கொண்டு பார்க்கிறார்.
இதோ அவர் பார்க்கிறார். இன்னமும் உயிரற்றதாகவும், உறங்குகிற ஒரு ஆளைப்போல தோற்றமளிப்பதுமான அமலோற்பவ மாதரசியின் திருச்சரீரத்தை அவர் காண்கிறார். சம்மனசுக்களின் ஒரு அணியால் தாங்கப்பட்டு, அந்த மாசற்ற சரீரம் மேலே மேலே உயர்ந்து கொண்டே போகிறது. பிரியவிடையின் ஒரு கடைசி சயிக்கினையாக அவர்களது மேற்போர்வையின் ஓர் ஓரமும், மூடுதுகிலும் வேகமாக அசைகின்றன. வேகமாக மேல்நோக்கி உயர்வதால் உருவாகும் காற்றினாலும், சம்மனசுக்களின் இறக்கைகளின் அசைவினாலும் அவை அப்படி அசைந்திருக்கலாம். அருளப்பர் அடிக்கடி மாதாவின் திருச்சரீரத்தைச் சுற்றி மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தவையும், நிச்சயமாக மாதாவின் உடுப்புகளின் மடிப்புகளில் இருந்திருக்கக் கூடியவையுமான சில பூக்கள் மாடியின் மீதும், ஜெத்சமேனியின் தரையின் மீதும் விழுகின்றன. அதே வேளையில் சம்மனசுக்களின் பலத்த ஓசான்னா கீதத்தின் ஒலி, அவர்கள் தூரம் செல்லச் செல்ல படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.
மோட்சத்தை நோக்கி எடுத்துச்செல்லப்படுகின்ற மாசற்ற சரீரத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் அருளப்பர். இது நிச்சயமாக அவரைத் தேற்றவும், தமது சுவீகாரத் தாயாரின் மீது தாம் கொண்டிருந்த அளவற்ற அன்பிற்குப் பிரதிபலனாகவும், கடவுளால் அவருக்கு அருளப்பட்ட ஒரு புதுமைதான். மாமரி இப்போது சூரியக்கதிர்களால் சூழப்பட்டிருக்கிறதை அவர் தெளிவாகக் காண்கிறார். எந்தப் பரவசநிலை அவர்களது ஆத்துமத்தை சரீரத்திலிருந்து பிரித்ததோ, அந்தப் பரவசநிலையிலிருந்து இப்போது அவர்கள் வெளியில் வருகிறார்கள். அவர்கள் இப்போது உயிர் பெற்று தங்கள் பாதங்களில் நிற்கின்றார்கள். ஏற்கனவே மகிமைப்படுத்தப்பட்டுள்ள சரீரங்களுக்கேயுரிய பரலோகக் கொடைகளையும் அவர்கள் இப்பொது அனுபவிக்கிறார்கள்.
அருளப்பர் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறார். கடவுளால் அவருக்கு அனுமதிக்ப்பட்ட இந்தப் புதுமையின் பலனாக தேவமாதவை அவர்கள் இப்போது இருக்கிறபடி அவர் காண்கிறார். மாதா மிக வேகமாக இப்பொது சம்மனசுக்களால், தாங்கப்படாமலேயே மோட்சத்தை நோக்கி உயர்ந்து செல்கிறார்கள். சம்மனசுக்கள் அவரகளைச் சூழ்ந்து பறந்தபடி ஓசான்னா கீதம் பாடுகிறார்கள். எந்த எழுதுகோலாலும், மனித வார்த்தையாலும், கலைஞனின் கைவேலையாலும் சித்தரிக்கப்படவோ, விவரிக்கப்படவோ, செதுக்கப்படவோ இயலாத அந்த பேரழகுக் காட்சியால் பரவச நிலைக்கு உட்பட்டிருக்கிறார் அருளப்பர்.
மட்டுப்பமாடியின் குட்டிச் சுவரின் மீது இன்னமும் சாய்ந்தபடி, அவர் சர்வேசுரனின் இந்த வியத்தகு ஒளி வடிவத்தை தொடர்ந்து தரிசித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் மாமரியைப் பற்றி உண்மையாகவே இந்த வார்த்தைகளை நாம் கூறலாம். அவதரித்த வார்த்தையானவரின் ரூபமாகவே அவர்கள் இருக்கும்படியாக, அவர்கள் மாசின்றி உற்பவிக்கவேண்டும் என்று விரும்பிய சர்வேசுரனால் ஓர் ஒப்பற்ற விதமாக அவர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது சிநேகமாகவே இருக்கிற சர்வேசுரன் தமது பூரண பிரியமுள்ள சீடனுக்கு கடைசியாக ஓர் உன்னதமான புதுமையைக் காண்பிக்க சித்தமானார். மிகப்பரிசுத்த மாதா தமது மிகப் பரிசுத்த குமாரனைச் சந்திக்கிற காட்சியை அருளப்பர் காண்கிறார். சேசுவும் ஜோதிப்பிரவாகமாகவே காட்சியளிக்கிறார். கம்பீரமும், விவரிக்க முடியாத பேரழகும் உள்ளவராக அவர் விரைவாக பரலோகத்திலிருந்து இறங்கி, தம் தாயாரிடத்தில் வந்து சேர்கிறார். பின் அவர்களோடு சேர்ந்து, இரண்டு பெரும் கோள்களைவிட அதிகப் பிரகாசத்தோடு, இருவரும் அவர் புறப்பட்டு வந்த இடத்தை நோக்கி மேலேறிச் செல்கிறார்கள்.
அருளப்பரின் காட்சி முடிகிறது. அவர் தம் தலையைத் தாழ்த்துகிறார். சோர்ந்திருக்கிற அவர் முகத்தில் மாமரியை இழந்த சோகமும், அவர்களது இப்போதைய மகிமையான நிலையைப் பற்றிய மகிழ்ச்சியும் ஒருசேரக் காணப்படுகின்றன. ஆயினும் இப்போது மகிழ்ச்சியானது துக்கத்தை வென்றிருக்கிறது.
அவர் பேசுகிறார்:” நன்றி, ஏன் சர்வேசுரா! உமக்கு நன்றி! இது நடக்கும் என்று முன்னமே அறிந்திருந்தேன். அவர்களுடைய பரலோக ஆரோபணத்தின் எந்தக் காட்சியையும் இழந்து விடாதபடி விழித்திருக்க விரும்பினேன். ஆனால் நான் தூங்கி மூன்று நாட்களாயிற்று. அவர்களுடைய ஆரோபணம் நடக்க இருந்த நேரத்தில் தூக்கமும், அசதியும், துக்கத்தோடு சேர்ந்து என்னை மேற்கொண்டு, என்னைத் தோற்கடித்துவிட்டன...ஆயினும் ஒ என் சர்வேசுரா! அந்த அற்புதக் கணத்தில் நான் தளர்ந்து போகாதவாரும் அதிகத் துன்பபடாத படியும் நீரே அதனை விரும்பியிருக்கக் கூடும். ....ஆம். உமது புதுமையால் அன்றி நான் கண்டிருக்க முடியாததை நான் காண வேண்டுமென்று நீர் விரும்பினது போலவே, நீர் நிச்சயமாக நான் சோர்ந்து உறங்குவதையும் விரும்பினீர். அவர்கள் ஏற்கனவே என்னிடமிருந்து தூரமாயிருந்தாலும், ஏற்கனவே மகிமைப்படுத்தப் பட்டவர்களாகவும், மகிமையுள்ளவர்களாகவும் இருந்தாலும், அவர்கள் எனக்கு மிக அருகில் இருப்பது போல நான் அவர்களைக் காணவேண்டும் என்று நீர் விரும்பினீர். ஏன் சேசுவையும் நான் திரும்பவும் காணச் செய்தீர்! ஒ! உன்னத மகிழ்வே! காணப்படக்கூடுமென்று நம்ப இயலாததும், நம்பப்படக்கூடாததுமான அதிசயமே! ஒ! சேசு-கடவுள் தமது அருளப்பனுக்குத் தந்த கொடைகளிலேல்லாம் பெருங்கொடையே! உன்னத வரப்பிரசாதமே! என் எஜமானரும், ஆண்டவருமானவரைத் திரும்பவும் காணுகிற பாக்கியமே! அவரை, அவரது திருமாதாவின் அருகில் காணும் பாக்கியமே! அவர் ஒரு சூரியனைப் போல, அவர்கள் ஒரு நிலவைப் போல, இருவருமே பூரண மகிமையொளியோடு (இருந்தார்கள்.) ஏனென்றால் அவர்கள் மகிமையுள்ளவர்களாகவும், இனி என்றென்றைக்குமாக மீண்டும் இணைக்கப்பட்டதில் பரம மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் இருந்தார்கள். பரலோக ஜெருசலேமின் இரு பெரும் நட்சத்திரங்களாகிய நீங்கள் இருவரும் சேர்ந்து இப்போது ஒளி வீசுகிற மோட்சம் இப்போது எப்படி இருக்கும்? நவ விலாச சம்மனசுக்கள், அர்சிஷ்டவர்களின் பேரானந்தம் இப்போது எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட பேரானந்தம்தான் மாதா தன் திருக்குமாரனோடு இருக்கும் காட்சியால் எனக்கு வழங்கப்பட்டது. இது அவருடைய ஒவ்வொரு வேதனையையும், அவர்களுடைய ஒவ்வொரு வேதனையையும் நீக்குகிற காரியம்! இன்னும் மேலாக என்னுடைய வேதனைகளும் நீங்குகின்றன. சமாதானம் என்னை ஆட்கொள்கிறது. கடவுளிடம் நான் கேட்ட மூன்று புதுமைகளில் இரண்டு நிறைவேறிவிட்டது. மாமரி மீண்டும் உயிர் பெறுவதை நான் கண்டேன்.சமாதானம் என்னிடம் திரும்பி வந்திருக்கிறதை நான் உணர்கிறேன். என் எல்லாத் துன்பங்களும் கூட முடிந்துவிட்டன, ஏனேன்றால் நீங்கள் மகிமையில் மீண்டும் இணைந்திருக்கிறதை நான் கண்டுவிட்டேன். அதற்காக உமக்கு நன்றி சர்வேசுரா, ஒ! சர்வேசுரா! மிகப் பரிசுத்தமான ஒரு சிருஷ்டியாலும் காணக்கூடாததை, இன்னும் மனிதனாயிருக்கிற நான் காணச் செய்ததற்காக நன்றி! அர்ச்சிஷ்டவர்களின் பாக்கியம் எத்தகையது? பொதுத் தீர்வைக்குப் பிறகு, சரீரங்களின் உத்தானத்திற்குப் பிறகு, மரணத்தின் போது பரலோகத்திற்கு ஏறிச் சென்ற தங்கள் ஆத்துமங்களோடு அந்த சரீரங்கள் மீண்டும் ஓன்று சேர்ந்த பின்னர் என்ன நடக்கும்?
விசுவசிப்பதற்க்கு எதையும் காண வேண்டிய தேவை எனக்கு இருந்ததில்லை. ஏனெனில் நான் ஏற்கனவே என் எஜமானரின் ஒவ்வொரு வார்த்தையையும் எப்போதும் உறுதியாக விசுவசித்து வந்திருக்கிறேன். ஆயினும் யுகங்களுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு, மண்ணாய்ப் போன சரீரம் மீண்டும் உயிர் பெற முடியும் என்பதில் அநேகர் சந்தேகம் கொள்வார்கள். அவர்களிடம், கிறிஸ்துநாதர் தமது சொந்த தெய்வீக வல்லமையால் உயிர்த்தெழுந்தார் என்று மட்டுமல்ல, மாறாக, அவருடைய திருமாதாவும், அதை மரணம் என்று சொல்ல முடியுமானால், தனது மரணத்திற்குப் பின் மூன்று நாட்கள் கழித்து, திரும்பவும் உயிர் பெற்றார்கள் என்றும், தனது ஆத்துமத்தோடு சரீரம் இணைக்கப்பட்டு, மோட்சத்தில் தனது நித்திய வாசஸ்தலத்தில் தனது திருமகனின் பாரிசத்தில் வீற்றிருக்கும்படி அங்கு எழுந்தருளிப் போனார்கள் என்றும் மிகப்பரிசுத்த காரியங்களின் மீது ஆணையிட்டுச் சொல்ல என்னால் கூடும். ஒ கிறிஸ்தவர்களே, சரீரங்களின் உயிர்ப்பிலும், உலக முடிவிலும், ஆத்தும, சரீரங்களின் நித்திய ஜீவியத்திலும், அர்சிஷ்டவர்களின் பேரின்ப ஜீவியத்திலும், மனதிரும்பாத குற்றமுள்ள மனிதர்களின் பயங்கரத்திற்குரிய நரக ஜீவியத்திலும் விசுவாசம் கொள்ளுங்கள். விசுவசிப்பதொடு, சேசுவும் மாமரியும் கொண்டிருக்கிற அதே பேரின்ப பாக்கியத்தை நீங்களும் கொண்டிருக்கும்படி அர்சிஷ்டவர்களாக வாழுங்கள். அவர்களது சரீரங்கள் மோட்சத்திற்கு எழுந்தருளிப் போனதை நான் கண்டேன். அதற்கு சாட்சியம் கூற என்னால் முடியும். நீதிமான்களாக வாழுங்கள். அப்போது ஒருநாள் சரீரத்தொடும், ஆத்துமத்தோடும் சூரியனாகிய சேசுவுக்கும், சகல நட்சத்திரங்களிலும் மேலான நட்சத்திரமாகிய மாமரிக்கும் அருகில் புதிய நித்திய உலகத்தில் நீங்கள் இருப்பீர்கள் என்று சொல்ல என்னால் முடியும். மீண்டும் உமக்கு நன்றி, என் சர்வேசுரா! இப்போது அவர்களால் விட்டுச் செல்லப்பட்டுள்ளதை நாம் ஓன்று சேர்ப்போம், அவர்களுடைய உடுப்புகளிலிருந்து விழுந்த மலர்களையும், படுக்கையில் விடப்பட்டுள்ள ஒலிவக் கிளைகளையும் எடுத்து, பத்திரப்படுத்துவோம். அவை உதவும்....ஆம், யாரைக் காண வேண்டுமென்று வீணாக நான் காத்திருந்தேனோ, அந்த என் சகோதரர்களுக்குத் துணை செய்யவும், அவர்களைத் தேற்றவும் அவை எனக்கு உதவும். சீக்கிரத்திலோ, தாமதாகவோ, எப்படியும் நான் அவர்களைக் காண்பேன்...”
கீழே சிதறிக்கிடக்கிற மலர்களின் இதழ்களை அவர் பொறுக்கியெடுக்கிறார். தமது மேலாடையின் மடிப்பில் அவற்றை வைத்துப் பிடித்தபடி அறைக்குள் திரும்பிப்போகிறார். பிறகு மிகக் கவனமாக கூரையிலுள்ள திறப்பை உற்றுப் பார்த்தபின் வியந்து இப்படி கூறுகிறார்: ”இன்னுமொரு புதுமை! சேசு மாமரியின் வாழ்வின் புதுமைகளோடு அற்புதமாய்ப் பொருந்துகிற மற்றுமொரு புதுமை! சர்வேசுரனாகிய அவர் தமது சொந்த வல்லமையைக் கொண்டு உயிர்த்தெழுந்தார். தமது சொந்த சித்தத்தினால் தமது கல்லறையை மூடியிருந்த கல்லைப்புரட்டினார். தமது சொந்த வல்லமையைக் கொண்டே அவர் பரலோகத்திற்கு ஆரோகணமானார். தாமாகவே! மிகப் பரிசுத்த மாதாவான மாமரியோ, ஒரு மனிதனின் குமாரத்தியாக இருந்ததால், சம்மனசுக்களின் உதவியை கொண்டு தனது பரலோக ஆரோபணதிற்கான பாதையைத் திறந்து வைத்தார்கள். சம்மனசுக்களின் உதவியைக் கொண்டே அவர்கள் பரலோகத்திற்கு எழுந்தருளிச் சென்றார்கள். கிறிஸ்து வானவரைப் பொறுத்த வரை, அவரது திருச்சரீரதிற்கு உயிரூட்டும்படி அது பூமியிலிருக்கும்போதே அவருடைய இஸ்பிரீத்து திரும்பி வந்தது. ஏனெனில் அவர்களது எதிரிகளின் வாய்களை அடைப்பதற்காகவும், அவர் தம்மைப் பின்செல்வோரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும்படியாகவும் அது அப்படித்தான் நிகழ வேண்டியிருந்தது. மரியாயிடமோ, அவர்களுடைய மிகப்பரிசுத்த திருச்சரீரம் ஏற்கனவே மோட்ச வாசலில் இருந்த பொது தான் அவர்களுடைய ஆவி திரும்பி வந்தது. ஏனெனில் சேசுவுக்கு இருந்தது போல, அவர்களுக்கு வேறு எந்தத் தேவையும் இல்லை. எல்லையற்ற தேவ ஞானத்தின் உன்னத வல்லமையே!” என்கிறார் அருளப்பர்.
அருளப்பர் இப்போது ஒரு சிறு துணியில் இன்னமும் அந்த சிறிய படுக்கையில் கிடந்த மலர்களையும், ஒலிவக் கிளைகளையும் சேகரிக்கிறார். பின் வெளியே சேகரித்தவைகளோடு அவற்றையும் ஓன்று சேர்த்து, பெட்டியின் மூடியின் மீது அவை எல்லாவற்றையும் வைக்கிறார். அதன்பிறகு அதைத் திறந்து, மாதாவின் சிறிய தலையணையையும், அந்த சிறிய படுக்கையின் விரிப்பையும் அதற்குள் வைக்கிறார். பின் கீழே சமையலறைக்குள் போய், மாதா பயன்படுத்திய நூற்புக் கழி, அடிக்கட்டை, மற்றும் சமையல் பாத்திரங்களை எடுத்து வந்து அவற்றை மற்ற பொருட்களோடு சேர்த்து வைக்கிறார்.
பெட்டியை மூடிவிட்டு முக்காலியில் உட்கார்ந்து வியப்போடு மீண்டும் பேசுகிறார்: “இப்போது எனக்கும் எல்லாம் நிறைவேறிவிட்டன! இப்போது தேவ ஆவியானவர் என்னை நடத்திச் செல்கிற எந்த இடத்திற்கும் நான் சுதந்திரமாகப் போக முடியும். ஆம், என்னால் போக முடியும்! போய், மனிதருக்கு அறிவிக்கும்படி என் குரு எனக்குத் தந்த தேவ வார்த்தைகளை விதைக்க முடியும். அப்படியே தேவ சிநேகத்தையும்! தேவ சிநேகத்திலும் அதன் வல்லமையிலும் அவர்கள் விசுவாசம் கொள்ளும்படி அவர்களுக்குப் போதிப்பேன். அன்பாயிருக்கிற சர்வேசுரன் மனிதர்களுக்குச் செய்ததை அவர்கள் அறியச் செய்வேன். அவருடைய பலியைப் பற்றியும், அவருடைய இடையறாத தேவத் திரவிய அனுமானத்தைப் பற்றியும், வழிபாட்டுச் சடங்கு பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பேன். அவற்றின் வழியாகவே, உலக முடிவு வரை, திவ்ய நற்கருணையில் சேசு கிறிஸ்துநாதரோடு நாம் இணைந்திருக்க முடியும். மேலும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியே வழிபாட்டையும், பலியையும் தொடந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கவும் எங்களால் முடியும். உத்தம சிநேகத்தின் சகல கொடைகளே! தேவசிநேகமே! நாங்கள் விசுவசித்ததைப் போலவும், விசுவசிக்கிறதைப் போலவும், அவர்களும் விசுவசிக்கும்படி, அன்பை அவர்கள் நேசிக்கச் செய்வேன். ஆண்டவருக்காக விளைச்சலும், பிடிக்கப்பட்ட மீன்களும் அதிகமாயிருக்கும்படி அன்பை விதைப்பேன். அன்பு சகலத்தையும் சாதிக்கிறது என்று மாமரி என்னோடு கடைசியாகப் பேசிய போது கூறினார்கள். சேசுவின் அப்போஸ்தலிக்கக் கல்லூரியில் ஒவ்வொரு மாணவரையும் அவர்கள் நீதியுள்ள முறையில் கணித்து வைத்திருந்தார்கள். அவர்கள் பார்வையில் நான் நேசிக்கிறவனாயிருந்தேன். மற்றவர்களைவிட அதிக நேசமுள்ளவன் என்று பெயர் பெற்றிருந்தேன். எனக்கு நேர்மாறாக வெறுப்பு என்றே பெயர் பெற்றிருந்தவன் யூதாஸ் இஸ்காரியோத். இராயப்பர் முன்யோசனையின்றி அவசரப்பட்டு எதையும் செய்கிறவர். பிலவேந்திரர் சாந்தமானவர். அல்பெயுசின் மக்கள் பரிசுத்தமும், ஞானமும் ஆவர். அவற்றோடு அவர்களிடம் உண்மையான கணவான்களுக்குரிய நடையுடை பாவனைகளும் இருந்தன. மற்றவர்களைப் பற்றியும் மாதா தெளிவாகக் கணித்து வைத்திருந்தார்கள். இப்போது இந்தப் பூலோகத்தில் என் எஜமானரும், என் மாதாவும் என்னோடு இல்லை. நேசிக்கிற சீடனாகிய நான், பல சாதியாரிடம் போய், அன்பை அவர்களுக்கு மத்தியில் பரப்புவேன். அன்பே என் போர்க்கருவியாகவும், என் விசுவாச சத்தியமாகவும் இருக்கும். அதைக் கொண்டு பசாசையும் அஞ்ஞானத்தையும் நான் தோற்கடிப்பேன். அநேக ஆத்துமங்களை வெற்றி கொள்வேன். இவ்வாறு பூமியின் மேல் உத்தம சிநேகமாகவே இருந்த சேசுவையும், மாமரியையும் நான் தொடர்ந்து கண்டு பாவிப்பேன்” என்கிறார்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
காட்சி 2 - கி.பி. 48 - பரிசுத்த கன்னி மாமரியின் பரலோக ஆரோபணம்.
Posted by
Christopher