அர்ச். பெர்னார்ட் - அதிமேற்றிராணியார் (கி.பி. 1153)
இவர் பிரான்ஸ் தேசத்தில் செல்வந்தர்கள் கோத்திரத்தில் பிறந்து மேலான கல்வி சாஸ்திரங்களைக் கற்றறிந்தார். இவர் சிறு வயதிலேயே தேவ தாயார்மீது அதிக பக்தி வைத்து அவர்களுடைய சுரூபத்தைப் பார்க்கும் போதெல்லாம் தலை குனிந்து வணங்குவார்.
இவருக்கிருந்த அழகு சௌந்தரியத்தைக் கண்ட துஷ்ட ஸ்திரீகள் இவரைச் சோதிக்கும்போது அவர்களை விட்டு அகன்று விடுவார். சில தோழருடன் இவர் பிரயாணம் செய்கையில் ஒரு வீட்டில் தங்கும்படி நேரிட்டபோது, இரவில் அந்த வீட்டுக்காரி துர் இச்சையுடன் அவரை அணுகினாள். உடனே இவர் எழுந்து திருடன் திருடன் என்று கூச்சல் போடவே, அவள் வெட்கி ஓடிப்போனாள்.
வேறொரு தடவை இவருக்குண்டான துர் இச்சையை அடக்கும்படி குளிர்ந்த ஜலத்தில் குதித்து வெற்றிகொண்டார். உலகில் நேரிடும் பாவச் சோதனைகளுக்குப் பயந்த இவர் சந்நியாசியாகப் போக இருக்கிறதைக் கண்ட இவருடைய உறவினர்களும் சிநேகிதரும் இவரை தடுக்க பெரிதும் பிரயாசைப்பட்டார்கள்.
பெர்னார்டோவெனில், சந்நியாச ஜீவியத்தைப்பற்றி எவ்வளவு உற்சாகத்துடன் பேசினாரெனில், உயர்ந்த உத்தியோகத்திலிருந்த இவருடைய 6 சகோதரர்களும் வேறு 30 துரைமார்களும் இவருடன் சேர்ந்து துறவியானார்கள்.
சில வருஷங்களுக்குப்பின் தன் சிரேஷ்டருடைய உத்தரவுப்படி பெர்னார்ட் ஒரு புது மடத்தை ஸ்தாபித்து, அதில் இவரும் இவரது துணைவர்களும் எவ்வளவு அர்ச்சியசிஷ்டவர்களாய் நடந்தார்கள் என்றால் அநேக அரசர்களும் சாமாசிகளும் துரைகளும் துறவற அந்தஸ்தில் உட்பட்டார்கள்.
இவருடைய அரிய புண்ணியங்களையும் சாஸ்திரத்தையும், புதுமைகளையும் குறித்து பாப்பரசரும் மேற்றிராணிமாரும் அரசரும் இவருடைய ஆலோசனையைக் கேட்பார்கள்.
பாப்பாண்டவருடைய உத்தரவுப்படி இவர் பல தேசங்களுக்குப் போய் பிரசங்கஞ் செய்து, பாவிகளை மனந்திருப்பி, பதித மதத்தையும் பிரிவினையையும் அழித்து, விரோதிகளான அரசர்களைச் சமாதானப்படுத்தி, திருச்சபைக்கு எண்ணற்ற நன்மைகளை உண்டாக்கி, அருந்தவத்தாலும் நெடும் பிரயாணத்தாலும் வியாதியுற்று, தமது 63-ம் வயதில் மோட்சத்தை சுதந்தரித்துக்கொண்டார். .
யோசனை
துஷ்டர் நம்மை கெடுக்க முயலும்போது நாமும் பெர்னார்டைப் பின்சென்று சர்ப்பத்தைவிட்டு விலகுவது போல அவர்களை விட்டு விலகுவோமாக..