அர்ச். ஜான் கான்சியுஸ் - துதியர் (கி.பி. 1473)
இவர் போலந்து நாட்டில் பிறந்து, தன் பக்தியுள்ள தாய் தந்தையரால் புண்ணிய வழியில் கவனத்துடன் வளர்க்கப்பட்டதால் தெய்வபக்தி உள்ளவராய் வாழ்ந்து வந்தார். ஜான் மேலான் சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்தபின், மற்ற இளைஞர்களுக்கு சாஸ்திரங்களைக் கற்பித்து வந்தார்.
இவர் மற்றவர்களுக்கு சாஸ்திரங்களைக் கற்பிக்கும்போது நல்லொழுக்கமாகிய ஞானப்பாலையும் அவர்களுக்கு ஊட்டி வந்தபடியால் அவர்கள் தங்கள் ஆசிரியரைப் போல நல்லொழுக்கமுள்ளவர்கள் ஆனார்கள்.
இவர் குருப்பட்டம் பெற்றபின் முன்பு செய்த தொழிலையே செய்ததினால் அளவற்ற ஞானப்பலன் உண்டாயிற்று. திவ்விய பலிபூசை நேரத்தில் இவரிடத்தில் காணப்படும் பக்தி பற்றுதலைக் காண்பவர்களுக்கு பக்தி உருக்கம் உண்டாகும்.
நெருப்பு பற்றியெறிந்த ஒரு பட்டணத்தை தமது பக்தியுள்ள ஜெபத்தால் ஆபத்தின்றி காப்பாற்றினார். ஏழை எளியவர்கள் மட்டில் தயவு காட்டி தமது கையிலுள்ள பணத்தை அவர்களுக்கு கொடுப்பார். திருச்சபையின் மட்டிலும் கர்த்தருடைய திருப்பாடுகளின் மட்டிலும் அதிக பற்றுதலும் அன்பும் வைத்து, உரோமைக்கும் பாலஸ்தீன தேசத்திற்கும் பலமுறை திருயாத்திரை சென்றார்.
ஒரு பிரயாணத்தில் இவர் திருடர் கையில் அகப்பட்டு தம்மிடமிருந்ததையெல்லாம் இழந்தார். தமது உள்சட்டையில் சில பொற்காசுகள் இருந்ததை பார்த்ததும், சற்றுத் தொலைவில் சென்றுக்கொண்டிருந்த திருடரைக் கூப்பிட்டு அதை அவர்களுக்குக் கொடுத்தார்.
இவர்கள் அவரிடத்தில் பறிமுதல் செய்ததையெல்லாம் அவருக்கு திரும்பக் கொடுத்து விட்டார்கள். ஜான் சகல புண்ணியங்களையும் செய்து புதுமை வரமும் பெற்று சர்வேசுரனுக்கு உத்தம ஊழியஞ் செய்து பாக்கியமான மரணமடைந்தார். .
யோசனை
நாமும் கபட தந்திரங்களை விலக்கி எதார்த்தவாதிகளாய் நடப்போமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். அந்தேமியுஸ், வே.
அர்ச். பர்சாபியாஸ், வே.
அர்ச். செனோபியுஸ், மே.
அர்ச். சிண்டுல்புஸ், கு.
அர்ச். எய்டன், மே.