அர்ச். எட்மண்ட், இராஜா, வேதசாட்சி-(கி.பி. 870)
எட்மண்டுக்கு 15 வயதாகும்போது இங்கிலாந்து தேசத்தின் கீழ்த்திசைக்கு இராஜாவானார். இவர் வயதில் இளைஞராயினும், பக்தியிலும் அறிவிலும், தாழ்ச்சி என்கிற புண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார். தமது மக்களை வெகு அன்புடன் கவனித்து ஆட்சி செய்தார்.
தேசத்தில் தேவ பக்தியும், நேர்மை குணமுமுள்ள உத்தியோகஸ்தர்களை நியமித்து, நீதி நியாயத்துடன் வேலை செய்யும்படி செய்தார். எப்போதும் மக்களுடைய நன்மைகளைத் தேடி, ஏழை எளியவர்களுக்கு உதவி புரிந்து, விதவைகள் அநாதைப் பிள்ளைகள் முதலியவர்களுக்கு விசேஷ வருமானங்களை ஏற்படுத்தி, சகலருடைய சுகத்தையும் விரும்பினதினால், இவர் தர்ம இராஜா என்று அழைக்கப்பட்டார்.
சங்கீதங்களை மனப்பாடம் செய்து, அடிக்கடி அவற்றை ஜெபித்து, சத்தியவேதம் செழித்தோங்கும்படி செய்தார். இவர் இவ்வாறு தம் நாட்டு மக்களை பரிபாலித்து வருகையில், டேன்ஸ் எனப்படும் முரட்டு ஜாதி ஜனங்கள் இங்கிலாந்தின் மீது திடீரென்று படையெடுத்துப் பட்டணங்களையும் திரளான ஜனங்களையும் நெருப்புக்கு இரையாக்கி, பல அக்கிரமங்களையும் புரிந்தபோது, எட்மண்ட தமது சிறு படையைத் திரட்டி எதிரிகளைத் தாக்கியும், அவர்களை அவரால் ஜெயிக்க முடியவில்லை.
அப்போது எட்மண்ட் மனித இரத்தத்தைச் சிந்த சம்மதியாமல் எதிரிகளுடன் சமாதானம் செய்ய சம்மதித்தார். கொடூர குணமுள்ள அவர்கள், சத்தியவேதத்திற்கு விரோதமான உடன்படிக்கைக்கு அவரை உடன்படுத்த முயற்சிக்கையில், எட்மண்ட் அதற்குச் சம்மதியாமல் எதிரிகள் கையால் கொல்லப்பட்டு, வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
ஒரு உத்தியோகம் பெற, ஒரு காரியம் கைகூட, வியாதி தீர சத்திய வேதத்திற்கு விரோதமான யாதொரு காரியத்தைச் செய்ய பிறர் நமக்குத் துர்புத்தி சொல்லும்போது நாம் அதற்கு சம்மதிக்கக் கூடாது.