அர்ச். ஜெரோம் எமிலியானி - துதியர் (கி.பி. 1537)
உயர்ந்த கோத்திரத்தாரான எமிலியானி படையில் சேர்ந்து ட்ரவிதோ நகரத்தின் அதிபதியாயிருந்து அங்கு நடந்த யுத்தத்தில் இவர் கைதியாக பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலுண்டான துன்பங்களை இவர் பொறுமையுடன் அனுபவித்து தேவ சித்தத்திற்கு அமைந்து தேவதாயாரின் மீது பக்தி வைத்து, சிறை நாட்களை ஜெபத் தியானத்தில் செலவழித்து வந்தார். தேவமாதா இவருக்குக் காணப்பட்டு, இவருடைய விலங்குகளை உடைத்து இவரை சிறையினின்று விடுவித்தார்கள்.
எமிலியானி தமது விலங்கை தேவமாதா பீடத்தில் தொங்கவிட்டு, தேவ ஊழியத்தில் தமது ஜீவிய காலத்தை செலவிடத் தீர்மானித்து, அக்காலத்திலுண்டான பயங்கரமான கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, தம்மால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்துவந்தார்.
அந்தக் கொள்ளை நோயின் நிமித்தம் ஆதரவின்றி விடப்பட்ட அனாதை பிள்ளைகளை எடுத்துக் காப்பாற்றி வந்தார். இவர்களை ஆதரிப்பதற்காக ஒரு சந்நியாச சபையை உண்டாக்கினார். இவருடைய விடாமுயற்சியினால் அநேக அனாதைப் பிள்ளைகள் பல நகரங்களில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டார்கள்.
எமிலியானி இடைவிடாமல் ஜெபஞ் செய்து, அரிதான தவச்செயல்களை நடத்தி, அனாதைப் பிள்ளைகளின் ஆத்தும் நன்மைக்காகவும் சரீர நன்மைக்காகவும் உழைத்து, தொற்று நோயாளிகளைச் சந்தித்து வருகையில் தாமும் அவ்வியாதியால் பீடிக்கப்பட்டு அர்ச்சியசிஷ்டவராக காலஞ் சென்றார்.
யோசனை
நாமும் இவரைக் கண்டுபாவித்து திக்கற்ற சிறுவர்களுடைய ஆத்தும சரீர நன்மைக்கான உதவியை புரிவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ஜோசப் பர்சாபாஸ், து.
அர்ச். மார்கரெட், க.வே.
அர்ச். ஜூஸ்தாவும் துணை., வே.