அர்ச். விக்டர் - வேதசாட்சி (3-ம் யுகம்)
மாக்ஸிமியன் சக்கரவர்த்தி சத்திய வேதத்தை அழிக்கத் தீர்மானித்து, கிறீஸ்தவர்களை வாதித்துக் கொல்ல அநியாய சட்டங்களை ஏற்படுத்தினான். தேசமெங்கும் கிறிஸ்தவர்கள் வாளுக்கும் நெருப்புக்கும் இரையாக்கப் பட்டார்கள்.
சக்கரவர்த்தியின் தளபதியான விக்டர் இரவு வேளையில் வீடு வீடாய்ச் சென்று கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதை அறிந்த அதிபதி அவரை வரவழைத்து நிஷ்டூரமாய் உபாதித்து, சிலுவையில் அறையப்பட்டவருடைய வேதத்தை மறுதலித்துவிடு என்று கட்டளையிட்டான்.
விக்டரோ சேசுநாதருடைய தெய்வீகத்தை அவனுக்கு விளக்கிக் காட்டி, இறந்தவர் மூன்றாம் நாள் உயிர்த்த அற்புதத்தை அவனுக்கு விவரித்து கூறினார். அதிபதி அதைக் கேட்டு சினங்கொண்டு, அவரைக் குரூரமாய் அடித்து சிறையில் வைத்தான்.
நடுச்சாம வேளையில் சம்மனசுகள் சிறையில் பிரவேசித்து வேதசாட்சியைத் தேற்றி அவருடன் தேவ கீர்த்தனைகளைப் பாடும்போது சிறையில் காணப்பட்ட அதிசய பிரகாசத்தை காவற் சேவகர் கண்டு மனந்திரும்பி சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள்.
இதைப்பற்றி கேள்விப்பட்ட அதிபதி வேதசாட்சியை வரவழைத்து அவர் மீது கொடுங்கோபம் கொண்டு அருகாமையில் வைக்கப்பட்டிருந்த சிலைக்குத் தூபங் காட்டும்படி கட்டளையிட்டபோது, விக்டர் ஒரு உதையால் அதைக் கீழே தள்ளினார்.
இதைக் கண்ட அதிபதி கோபத்தால் பொங்கி விக்டருடைய காலை நறுக்கி, அவரைச் சித்திரவதைப்படுத்தி, மூன்று காவற் சேவகருடன் அவரைக் கடலில் எறிந்து போடும்படி கட்டளையிட்டான். கிறிஸ்தவர்கள் வேதசாட்சியின் சரீரங்களை நல்லடக்கஞ் செய்தார்கள்.
யோசனை
நாம் எந்த அந்தஸ்தில் இருந்த போதிலும் தக்க சமயம் பார்த்து பிறருக்கு நற்புத்தி சொல்லக்கடவோம்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ப்றாக்செடெஸ், க.
அர்ச். ஸோட்டிகுஸ், வே.
அர்ச். பாறாட்பெசியாபாஸ், வே.
அர்ச். ஆர்போகாஸ்துஸ், மே.