ஆகஸ்ட் 21

அர்ச். ஷந்தால் ஜேன் பிரான்சீஸ்கம்மாள் - விதவை (கி.பி. 1641)

துரை மகளான பிரான்சீஸ்கம்மாள் தன் தாயின் மரணத்தால் மிகவும் துயரப்பட்ட போதிலும் தேவமாதாவைத் தன் தாயாக தெரிந்துகொண்டு, அவர்களுடைய ஆதரவில் வளர்ந்து புண்ணியத்தில் நிலைக்கொண்டாள். 

இவளுக்கு வயது வந்தபின் பதித மதத்தைச் சேர்ந்த ஒரு துரை இவளை விவாகஞ் செய்துகொள்ள விருப்பமாயிருப்பதை இவள் அறிந்து, சர்வேசுர னுடையவும் திருச்சபையினுடையவும் விரோதியை மணமுடித்துக்கொள்வ தில்லை என்றாள். 

ஆனால் நற்குணசாலியும் புண்ணியவானுமான ஷந்தால் துரைக்கு வாழ்க்கைப்பட்டு அவருடன் அன்னியோன்னியமாய் வாழ்ந்து வந்தாள். சம்சாரத் தொல்லையினிமித்தம் ஆத்தும காரியங்களை அசட்டை செய்யாமல் தினமும் ஜெபதபம், திவ்விய பூசை காணுதல், தேவதிரவிய அநுமானங்களைப் பெறுதல் முதலிய ஞானக் காரியங்களை சுறுசுறுப்புடன் அனுசரித்து வந்தாள். 

தன் பிள்ளையை தெய்வ பயத்திலும் தர்ம வழியிலும் நடத்தி தன் ஊழியர்களின் நன்னடத்தையைக் கவனித்தாள். ஷந்தால் துரை ஒரு நாள் வேட்டைக்குச் சென்றபோது வேறொரு துரை சுட்ட குண்டால் காயப்பட்டு நல்ல ஆயத்தத்துடன் மரணமானார். 

பிரான்சீஸ்கம்மாள் தன் கணவனுடைய மரணத் தால் மிகவும் துக்கப்பட்டு, அவருக்காக ஜெப தபங்களையும் திவ்விய பலி பூசைகளையும் ஒப்புக்கொடுத்தாள். துறவியாக ஆசித்து, சகலத்தையும் துறந்து வெளிப்படும்போது அவளுடைய ஏக குமாரனான சிறுவன் அதற்குச் சம்மதியாமல் வாசற்படியில் படுத்துக்கொண்டான். 

பிரான்சீஸ்கம்மாள் அழுகை கண்ணீருடன் அவனைத் தாண்டிக்கொண்டு போய் மங்கள வார்த்தை சபையை அர்ச். பிரான்சீஸ்க் சேல்ஸ் என்பவருடைய உதவியால் ஸ்தாபித்து, அதில் சேர்ந்தவர்களுடன் உத்தமியாய் வாழ்ந்து, தனக்குண்டான துன்பங்களைப் பொறுமையுடன் அனுபவித்து, அர்ச்சியசிஷ்டவளாய் மரித்தாள். 

இவள் ஆத்துமம் மோட்சத்திற்குப் போகிறதை அர்ச். வின்சென்ட் பவுல் என்பவர் கண்டார்.

யோசனை 

கிறீஸ்தவர்கள் எந்த காரணத்தைக்கொண்டும் பதிதரை மணமுடித்துக் கொள்ளக் கூடாது. தேவ அழைப்பு உண்டாகும்போது அதற்கு நேரிடும் சகல தடைகளையும் தைரியத்துடன் வெல்ல வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். போனோசஸும், துணை. வே.