அர்ச். பெனடிக்ட். மடாதிபதி (கி.பி. 543)
ஆசீர்வாதேந்திரர் என்னும் அர்த்தம் கொண்ட பெனடிக்ட் என்பவர் சாஸ்திரங்களைக் கற்கும்படி உரோமைக்கு அனுப்பப்பட்டார்.
அவ்விடத்தில் படிக்கும்போது தன் நண்பர்களின் பாவ நடத்தையைக் கண்டு பெனடிக்ட் பயந்து வனாந்தரம் சென்று அவ்விடத்தில் ஜெப தபத்தில் காலத்தைச் செலவழித்தார்.
அவ்விடத்தில் துஷ்டப் பசாசு மோகச் சோதனையால் அவரைத் துன்பப்படுத்தும்போது, பெனடிக்ட் ஒரு முட்செடியில் புரண்டு பசாசைத் துரத்தினார்.
அவருடைய புண்ணியத்தைக் கண்ட ஒரு சந்நியாச மடத்தார், இறந்து போன தங்கள் சிரேஷ்டருக்குப் பதிலாகத் தங்கள் மடத்தை நடத்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டதால் பெனடிக்ட் அங்கு சென்றார்.
சட்டத்திட்டங்களைச் சரியாய் அநுசரிக்க இஷ்டமில்லாத சில துஷ்டர் அவருக்கு நஞ்சிட்ட பானத்தைக் கொடுத்தபோது அவர் அதன் மேல் சிலுவை அடையாளத்தை வரைந்தவுடனே அந்தப்பாத்திரம் உடைந்து விழுந்தது.
அர்ச். பெனடிக்ட் அவ்விடத்தை விட்டு வேறு ஸ்தலஞ் சென்று தம்மைப் பின்சென்ற கணக்கில்லாத சீஷர்களுக்கு அநேக மடங்களைக் கட்டி வைத்தார்.
மேலும் அவர் கைப்பட சந்நியாச ஓழுங்குகளை எழுதிக்கொடுத்து புண்ணியத்திலும் தபத்திலும் அவர்களை உத்தமராக்கினார்.
அவர்களுக்குள் அநேகர் சிறந்த அர்ச்சியசிஷ்டவர்களானார்கள். அர்ச். பெனடிக்ட் இடைவிடா ஜெபத்தாலும் கடுந் தபத்தாலும் அநேகப் புதுமைகளைச் செய்தார்.
இறந்த ஒருவனுக்கு உயிர் கொடுத்தார். பசாசுகளை ஓட்டினார். தீர்க்கதரிசனங்களை உரைத்தார். கடைசியாய், சகல புண்ணியங்களையுஞ் செய்து உயிர் துறந்து மோட்ச பதவி சேர்ந்தார்.
யோசனை
நாமும் பாவச் சோதனையை ஜெபத்தாலும் ஒறுத்தல் முயற்சியாலும் ஜெயிப்போமாக. துறவிகள் முகத்தாட்சண்யத்தை ஒருபோதும் பாராமல் புண்ணியவாளரையும் சட்டத்திட்டங்களை ஒழுங்காய் அனுசரிக்கிறவர் களையும் சிரேஷ்டர்களாகத் தெரிந்து கொள்வார்களாக..
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். செராப்பியன், ம.
அர்ச். செராப்பியன். மே.
அர்ச் . என்ன ர், ம.