அர்ச். உர்சுலாவும் துணைவர்களும் - வேதசாட்சிகள் (கி.பி. 453)
உர்சுலம்மாள் இங்கிலாந்து தேசத்தில் ஒரு பெரிய கன்னியர் மடத்தை ஸ்தாபித்து, அதில் சேர்ந்த அநேக கன்னியருக்கு சிரேஷ்ட தாயாராகி அவர்களை ஜெபத்திலும் புண்ணிய வழியிலும் விவேகத்துடன் நடத்தி வந்தாள்.
அக்காலத்தில் அஞ்ஞானிகளான சாக்ஸன் எனப்படும் முரடரும் கொடூர குணமுடையவர்களுமான ஒரு ஜாதியாரால் இங்கிலாந்து தேசம் கொள்ளையடிக்கப்பட்டதினால், அத்தேசத்தார் தங்கள் சுய தேசத்தை விட்டுவிட்டு கால், ஜெர்மனி முதலிய அன்னிய நாடுகளுக்கு ஓடிப்போனார்கள்.
உர்சுலாவும் தன் மடத்தின் கன்னியரோடு இங்கிலாந்தை விட்டு ஜெர்மனிக்குப் புறப்படும்போது, அநேகம் ஸ்திரீகளும் கன்னியர் கூட்டத்தைப் பின்தொடர்ந்தார்கள். 11,000 பேர் தங்கள் தேசத்தை விட்டுப் புறப்பட்டு, ரைன் நதியின் அருகாமையிலுள்ள கொலோன் நகரை அடைந்து அவ்விடத்தில் புண்ணியக் காரியங்களை நடத்தி சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தார்கள்.
ஜெர்மனி தேசமும் குழப்பத்திற் குள்ளாயிருந்தபடியால் அன்ஸ் எனப்படும் துஷ்டர் புண்ணிய ஸ்திரீகள் கூடியிருந்த ஸ்தலத்திற்குச் சென்று, தங்களது கெட்டச் செயல்களுக்கு அவர்களை இணங்க செய்த முயற்சியெல்லாம் வீணானதால் உர்சுலம்மாளையும் 11,000 கன்னியர்களையும் கொலை செய்தார்கள். இந்தக் கன்னியர் எல்லோரும் தங்கள் கன்னிமையினிமித்தம் தங்கள் இரத்தத்தைச் சிந்தி வேதசாட்சிகள் ஆனார்கள்.
யோசனை
சிறுவர்களும், பெரியவர்களும், இல்லற அந்தஸ்திலிருப்பவர்களும், விரத்தரும் தங்கள் தங்கள் அந்தஸ்திற்கு ஏற்றபடி ஆத்துமத்திலும் சரீரத்திலும் கற்பை அனுசரிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ஹிலாரியன், ம.
அர்ச். பின்டன், ம.