அர்ச்.சூசையப்பரின் முதுமையை தியானிப்போம்
தியானம்
அர்ச்.சூசையப்பர் எந்த வயதில் இறந்தார் என்பது மறைநூல்களில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் சேசுகிறிஸ்து போதிக்க தொடங்கும் முன்பாக இறந்துவிட்டார் என வேதநூல்கள் கூறுகின்றன. அவருக்கு வயது ஆக ஆக அவரது சக்தி குறைந்து பலமிழந்து, நோய் தாக்கி தளர்ந்து இருந்தார். அப்படி இருந்தும் தன்னால் இயன்ற அளவு வேலை செய்தார். தனக்கு வரும் சோர்வு, நோய், துன்பங்களை பொறுமையோடு சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார். அவர் இவ்வுலக துன்பங்களை மறந்து வரப்போகும் மோட்ச இன்பத்தை எதிர்பார்த்திருந்தார்
சேசு அவர்கள் வீட்டில் இருந்ததால் மோட்சமே அவர் வீட்டில் இருந்ததாக மகிழ்ந்தார் அர்ச். சூசையப்பர்.
அர்ச். சூசையப்பர் தனது ஆன்மா எப்போது உடலை விட்டுப் பிரிந்து மோட்சம் செல்லும் என ஆவலோடு காத்திருந்தார். மாமரியன்னையும் சேசுவும் அவரது உடல்நிலையில் அதிக கவனம் எடுத்து கவனித்தார்கள். அவருக்கு அவர்களது பாசமும் கவனிப்பும் மிகவும் சந்தோஷமாக இருந்தது
அர்ச்.சூசையப்பர் மரணப்படுக்கையில் இருந்தபோது அவருடைய மனைவியாகிய மாமரியன்னை தனக்காக அவர் அனுபவித்த துன்பங்களுக்காக மிகுந்த மனம் வருத்தப்பட்டு பணிவிடை செய்து அவருக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறி வந்தார்கள். அவரது நெற்றி வியர்வையை துடைத்து இரவும் பகலும் அருகிலிருந்து நன்மரணத்தையும் மோட்ச பேரின்பத்தையும் சர்வேசுரன் அளிக்க வேண்டுமென்று வானதூதர்களிடமும் செபித்துக்கொண்டிருந்தார்கள்.
மேலும் அவர் தாய்வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்தப்படுத்தப்பட்டு குழந்தையாய் இருக்கும்போது இறை அருளால் நிரப்பப்பட்டு சர்வேசுரனின் விசேஷ வரத்தால் எந்தவொரு சாவான பாவத்தையும் செய்யாமல் அதிகமான புண்ணியங்களை மட்டும் செய்துவந்ததால் தன்னுடைய வாழ்நாட்களைப்பற்றி நினைக்கும்போது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது
தம்முடைய திருமகனாகிய சேசுகிறிஸ்துவின் வாக்குறுதிபடி தமக்கு மோட்சம் பரிசாக கிடைக்கும் என உறுதியாய் அறிந்ததால் மோட்சத்தை அடையும் சந்தோஷத்தில் இருந்தார்
அர்ச்.சூசையப்பரின் மரண தருவாயில் அவரது மனைவியான மாமரியன்னை அவர் தனக்காக அனுபவித்த துன்பங்களை நினைத்து அவரிடம் அதிகமான பாசத்துடன் அவருக்கு தேவையானவைகளை கொடுத்து அவருக்கு பணிவிடை செய்து வந்தார்கள். மேலும் அவருக்கு ஆறுதலாக பேசி அவரது நெற்றிவியர்வையைத் துடைத்தெடுத்தார்கள். இரவும் பகலும் அவரருகிலே காத்திருந்தார்கள். அவருக்கு நன்மரணமும் மோட்சமும் சர்வேசுரன் அளிக்கவேண்டுமென்று செபித்தார்கள். வான தூதர்களும் அவருக்கு உதவியாக வரவேண்டுமென்று செபித்தார்கள்.
சேசுவோ மற்ற குழந்தைகள் தங்கள் தந்தையை நேசிப்பதைவிட அர்ச்.சூசையப்பரை அதிகமாய் நேசித்தார். அர்ச்.சூசையப்பருக்கு எந்தவொரு குறையும் இல்லாதவாறு விசாரித்து, அவர் அனுபவிக்கும் வலி, துன்பம், வருத்தம் இவைகள் அளவில்லா நித்திய பேரின்பத் திற்காக என்பதை விளக்கி அவரை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்ள செய்தார். அவருக்காக வானுலகில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரியணையை காண்பித்து, அவரது இதயத்தில் மோட்ச இன்பத்தைப் பெருக செய்தார்
கிறிஸ்தவர்களாகிய நாம் உணர வேண்டியது என்னவென்றால் விளக்கு எரிய எரிய எண்ணெய் குறைவது போலவும், கையில் இருக்கும் பணம் செலவழிக்க செலவழிக்க குறைவது போலவும் நம்முடைய வாழ்நாளும் குறைந்து கொண்டே வருவதாம். நாம் விழிப்பாய் இருக்க வேண்டும்
புதுமை
இஸ்பானியா நாட்டிலுள்ள வலேன்சியா என்ற புகழ்பெற்ற நகரத்தில் ஒரு பக்தியுள்ள வியாபாரி இருந்தார். அவரோ தான் செய்யும் தொழிலில் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல், நீதி நியாயப்படி தான் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, வாங்குவதிலும் விற்பதிலும் சிறிதும் நீதி பிசகாமல் நடந்து வந்தார்
அதுமட்டுமல்லாமல் இறைவாக்கினையும், கட்டளைகளையும் குறைவின்றி கடைப்பிடித்து வந்தார். பரிசுத்த திருக் குடும்பத்திடம் தனது பக்தியை காண்பித்தார். வருடந்தோறும் சேசுவின் பிறந்தநாளில் முதியவர் ஒருவரையும், கைக்குழந்தையுடன் உள்ள பெண்மணியையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு விருந்து படைத்து மகிழ்வார். அப்போது அவர் பரிசுத்த திருக் குடும்பத்தைக் கனம் பண்ணுவதாக மகிழ்ச்சியடைவார்.
பக்தியுள்ள வியாபாரி வருடந்தோறும் இத்தகைய பக்தி முயற்சிகளை செய்து வந்தார். அவ்வாறு செய்தபோது பரிசுத்த திருக் குடும்பமே தனது இல்லத்தில் வந்து உணவு உண்டதாக எண்ணி மகிழ்ந்தார் திருக்குடும்பத்தின்மேல் அவருக்கு இருந்த பக்தியைக் கண்டு திருக்குடும்பத்தின் ஆசீர் அவருக்கு நிரம்ப கிடைத்தது. அவர் எல்லோராலும் மதிக்கப்பட்டார். அவரது குழந்தைகள் நல்ல நிலையில் இருந்தனர். அவர் தள்ளாத வயது வரையும் வாழ்ந்தார்
அர்ச்.சூசையப்பரின் அருளால் தனது மரணத்தை முன்னரே அறிந்து நன்மரணத்திற்கு தன்னை ஆயத்தப்படுத்தி கொண்டார். மரண வேளையில் தன்னிடம் வந்த பரிசுத்த திருக் குடும்பத்தில் தன் ஆன்மாவை ஒப்படைத்தார்.
கிறிஸ்தவர்களாகிய நாமும் வாழ்நாளிலும் மரண நேரத்திலும் இறையாசீர் கிடைப்பதற்காக அர்ச்.சூசையப்பரிடம் பக்தியோடு செபிப்போம்
(1 பர, 3அரு, பிதா)
செபம்
புண்ணியத்தில் பூத்த புண்ணியமான பிதா பிதாவாகிய அர்ச்.சூசையப்பரே! உம்மை வணங்கி போற்றி புகழ்கிறோம். வயதில் முதிர்ந்தவர்கள் இவ்வுலக கவலைகளை விட்டு விட்டு மோட்ச வீட்டைத் தேடவும், தங்களுக்கு வரும் நோய்களின் வலியை பொறுமையோடு சகிக்கவும், தங்களை மரணத்திற்கு தயார்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு உதவி செய்தருளும் நீர் வயோதிக காலத்தில் பக்திமானாய் இருந்ததுபோல எங்களையும் பக்தியாக இருக்கச் செய்யும். உம்மைப் பார்த்து உமது பிள்ளைகளாய் இருக்கிற நாங்கள் எல்லோரும் எப்போதும் மரணிக்க தயாராய் இருக்க உதவி செய்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம். ஆமென்
இன்று சொல்ல வேண்டிய செபம்
முதியோர்களுக்கு பாதுகாவலரான அர்ச்.சூசையப்பரே! எங்களை பாதுகாத்தருளும்
முதியோர்களுக்கு பாதுகாவலரான அர்ச்.சூசையப்பரே எங்களுக்கு ஆறுதலாக இரும்.
முதியோர்களுக்கு அடைக்கலமான அர்ச்.சூசையப்பரே எங்களுக்கு நல்ல மரணத்தைக் கொடும்.
செய்ய வேண்டிய நற்செயல்
முதியவர் ஒருவருக்கு நோயில் பூசுதல் அளிக்க ஏற்பாடு செய்து நன்மரணத்திற்கு தயார் செய்தல்