பிப்ரவரி 22

அர்ச். இராயப்பர் தமது பத்திராசனத்தை அந்தியோக்கியாவில் ஸ்தாபித்த திருநாள்.

நமது கர்த்தர் மோட்சத்திற்கு ஆரோகணமானபின், திருச்சபைத் தலைவரான அர்ச். இராயப்பர் ஜெருசலேம் நகரில் வேதம் போதித்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். பிறகு சீரிய தேசத்திற்குச் சென்று வேதம் போதிக்கையில் அஞ்ஞானிகள் அவரைப் பல விதத் திலும் துன்பப்படுத்தி வந்தார்கள்.

அந்தியோக்கியாவில் மரித்த ஒருவனுக்கு இவர் உயிர் தந்ததைக் கண்ட அவ்வூரார் அதிசயித்து சத்திய வேதத்தில் உட்பட்டு தேவ ஆராதனைக்காக ஒரு கோவிலையும் கட்டி வைத்தார்கள். அர்ச். இராயப்பர் ஒரு சிம்மாசனத்தை அந்த கோவிலில் ஸ்தாபித்து அதில் உட்கார்ந்து ஜனங்களுக்கு வேதம் போதித்து வந்தார்.

இதனாலேயே ஒவ்வொரு மேற்றிராணியாரும் தமது கோவிலில் தமது ஞான அதிகாரத்திற்கு குறிப்பாக ஒரு சிம்மாசனம் ஸ்தாபித்திருக்கிறார்கள். இதன் ஞாபகமாக அர்ச். இராயப்பர் அந்தியோக்கியாவில் ஸ்தாபித்த சிங்காசனத் திருவிழா இன்று கொண்டாடப் படுகிறது.

யோசனை

ஒவ்வொரு கிறீஸ்தவனும், தான் ஞானஸ்நானம் பெற்ற நாளையும், பெயர்கொண்ட திருநாளையும், திருமண வருஷாந்தர நாளையும், துறவிகள் தங்கள் சபையில் உட்பட்டு வார்த்தைப்பாடு கொடுத்த நாளையும் ஜெப தபத்தால் கொண்டாடுவது நல்ல வழக்கமாகும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மார்கரெட், தபசி.
அர்ச். தேலாஸியுஸும் துணை., து.
அர்ச். பாரதாத், து.