அர்ச். யூவோ. துதியர் (கி.பி. 1353)
உத்தம கோத்திரத்தில் பிறந்த யூவோ, சிறு வயதில் வெளிதேசங்களுக்குச் சென்று மேலான சாஸ்திரங்களைப் படித்துவந்தார். அவருடைய பக்தியுள்ள தாயார், அவரை நோக்கி, மகனே நீ அர்ச்சியசிஷ்டவனாய் ஆகும்படியாக வாழ்வாயாக என்று அடிக்கடி சொல்வதை யூவோ கேட்டு அதற்காகவே நான் பிரயாசைப்பட்டு வருகிறேன் அம்மா என்பார்.
அவர் தாயின் நல்ல புத்திமதி அவருடைய இருதயத்தில் ஆழமாக ஊன்றியபடியால், பாவத்தை வெறுத்து புண்ணிய வழியில் நடந்து, ஜெபத்திலும் படிப்பிலும் காலத்தைச் செலவிட்டு, கிடைக்கும் நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று வியாதியஸ்தர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்.
இவர் நியாயாதிபதி உத்தியோகத்திலிருந்து மகா நீதியுடன் விசாரணை செய்து வந்தார். கடைசியாய் உலகத்தைத் துறந்து குருப்பட்டம் பெற்று, பிறருடைய ஆத்தும் இரட்சண்யத்திற்காக ஊக்கத்துடன் உழைத்து வந்தார். பாவிகள் மனந்திரும்பும்படி ஜெப தபம் ஒருசந்தி முதலிய ஞான முயற்சிகளைச் செய்து சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்பார்.
ஏழைகள் மட்டில் அதிக இரக்கம் காட்டி, தாராளமாய் அவர்களுக்கு உதவி புரிவார். இவர் வியாதியாய் விழுந்து பலம் குன்றிய போதிலும், ஜெப தபங்களை விடவில்லை. கர்த்தர் மோட்ச ஆரோகண மான திருநாளன்று தமது வியாதியைப் பொருட்படுத்தாமல் கிறீஸ்தவர்களுக்கு வேண்டிய புத்திமதிகளை கூறி, இவருடைய உதவியால் திவ்விய பலிபூசை செய்து கடைசி தேவதிரவிய அநுமானங்களைப் பெற்று சர்வேசுரனுடன் சம்பாஷித்து மோட்ச பதவியடைந்தார்.
யோசனை
பெற்றோரே! அர்ச். யூவோ என்பவருடைய தாயைக் கண்டுபாவித்து உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லாலும் செயலாலும் நல்ல புத்தியைக் கற்பிப்பீர்களாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். பசிலிஸ்குஸ், வே.
அர்ச். காஸ்துஸும் துணை., வே.
அர்ச். போபோ, மே.
அர்ச். கோனால், ம.