அர்ச். சிம்போரியன் - வேதசாட்சி (கி.பி. 180)
கல்லியா தேசத்திலுள்ள அவுடன் என்னும் ஊரில் உயர்ந்த கோத்திரத்தைச் சேர்ந்த சிம்போரியன் என்னும் வாலிபர் சத்திய வேதக் கட்டளைப்படி நடந்து உத்தம கிறீஸ்தவராயிருந்தார். அவ்வூரில் சில கிறீஸ்தவர்கள் தவிர, மற்றவர்கள் அனைவரும் பொய் மதத்தைத் தழுவின வர்களாயிருந்தார்கள்.
ஒருநாள் அவ்வூரில் திருவிழா நடந்தபோது பொய்த் தேவதையின் சிலையை ஒரு தேரில் ஏற்றி கொட்டு முழக்கத்துடன் அவ்வூரார் ஊர்க்கோலம் சென்றபோது அஞ்ஞானிகள் எல்லோரும் மண்டியிட்டு அதை ஆராதித்தார்கள்.
சிம்போரியன் அதை சட்டை செய்யாமலிருந்ததினால் அவர்கள் அவரைப் பிடித்து நடுவனுக்கு கையளித்தார்கள். நடுவனோ வாலிபனுக்கு நயபயத்தைக் காட்டி அவரை மயக்கியும், அவர் வேதத்தில் உறுதியாயிருந்ததினால், அவரை நிஷ்டூரமாய் அடித்து தலையை வெட்டும்படி கட்டளையிட்டான்.
வேதசாட்சி கொலைக்களத்திற்கு போகும்போது அவரின் தாயார் அவருக்கு எதிரில் வந்து, "மகனே, சிம்போரியனே, பயப்படாதே; மோட்சத்தை அன்னார்ந்து பார். இந்த சாவு உனக்கு நித்திய பாக்கியத்திற்கு ஆரம்பமாகும்” என்று புத்தி சொன்னாள்.
இதைக் கேட்ட வேதசாட்சிக்கு அதிக உற்சாகமுண்டாகி, தளரா தைரியத்துடன் வேதத்திற்காக தலையைக் கொடுத்து வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
விசுவாசமற்ற கிறீஸ்தவர்கள் அஞ்ஞான தேர் திருநாளுக்கு உதவி செய்து, கற்பூரம், பூ, தேங்காய் முதலியவற்றைக் கொடுத்து, திருநீறு, தாயத்து, முதலியவற்றை பெற்றுக்கொண்டு, சில சமயங்களில் பசாசின் சிலையைக் கையெடுத்துக் கும்பிடுவது எவ்வளவு பெரிய துரோகம்! நாம் இவர்களைப் பின்பற்றல் ஆகாது.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ஹிப்போலீத்துஸ், மே.வே.
அர்ச். திமோத்தி, வே.
அர்ச். ஆன்ட்ரு , து.
அர்ச். பிலிபேர்ட், ம.