ஏப்ரல் 22

அர்ச். அசாடெஸம், தார்பாவும் துணைவரும். வேதசாட்சிகள்

பெர்சியா தேசத்தில் வேத கலகம் உண்டானபோது பெரிய வெள்ளிக்கிழமை அர்ச். சிமையோன் என்பவர் அநேக கிறீஸ்தவர்களுடன் வேதத்திற்காகக் கொல்லப்பட்டார்.

அரசனின் மந்திரிகளில் ஒருவரான அசாடெஸ் என்பவர் பலவாறாக உபாதிக்கப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்.

அந்த நாளில் அரசனுடைய மனைவியான இராணி பயங்கர வியாதியால் வருந்தும்போது இறந்துபோன சிமையோனுடைய சகோதரியான தார்பா என்பவளுடைய மந்திர வித்தையால் இக்கொடிய வியாதி இராணிக்கு உண்டானதென்று வேத விரோதிகள் பிதற்றிய வியர்த்தக் கதையை அதிகாரிகள் நம்பி, அவளையும் வேறொரு கன்னிகையையும் சிறைப்படுத்தினார்கள்.

அதிகாரிகள் அவ்விருவரையும் நீதியாசனத்திற்குமுன் வரவழைத்து, உன் சகோதரன் அசாடெஸ் கொல்லப்பட்டதனால் நீ மந்திர வித்தையைப் பிரயோகித்து ஏன் இராணிக்கு வியாதியை உண்டாக்கினாய் என்று கேட்டதற்கு, "மந்திர வித்தை எனக்குத் தெரியாது.

மேலும் அதைப் பிரயோகிக்க கூடாதென்று எங்கள் வேதம் போதிக்கிறது. என் சகோதரன் இப்போது மோட்சத்தில் இருப்பதால் அவருக்காக நான் யாரையும் பழிவாங்குவது நியாயமில்லை” என்று கூறவே, அவர்கள் இருவரையும் அதிகாரிகள் சிறைக்கு அனுப்பினார்கள்.

தார்பா என்பவள் மிகவும் அழகாக இருந்ததைக் கண்ட நடுவர் ஒருவனுக்குப்பின் ஒருவனாய் சிறைக்குப் போய் தனக்கு வாழ்க்கைப் படும்படி அவளைக் கேட்டபோது, அவள் அவர்களைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டாள்.

இதனால் அவர்கள் அவ்விருவரையும் சித்திரவதைச் செய்து ஒரு இரம்பத்தால் அறுத்து வதைக்கும்படி தீர்ப்பு கூறினார்கள்.

அவ்வாறே அவ்விருவரும் வேதசாட்சி முடி பெற்றார்கள்.

யோசனை 

நாமும் வேத கற்பனையை, அழிவுக்குரிய சகல வஸ்துக்களைவிட மேலானதாக பாவித்து கடைபிடிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். சோத்தேரும் காயூஸும், பா.வே.
அர்ச். எபிபோடியுஸும் துணை. வே.
அர்ச். தெயோதோருஸ், மே.
அர்ச். ஒப்பர்துானா, க.
அர்ச். லேயனீதெஸ், வே.