அக்டோபர் 22

அர்ச். பிலிப்பும் துணைவர்களும் - வேதசாட்சிகள் (கி.பி. 304)

தராஸ் நாட்டில் பிலிப் என்பவர் சத்திய வேதம் பரவுவதற்காக மிகவும் கவனத்துடன் பிரயாசைப்பட்டார். இவருடைய புண்ணியத்தையும் புத்தி ஞானத்தையும் குறித்து இவர் மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார். 

இவர் காலத்தில் அஞ்ஞான அரசர்கள் சத்திய வேதத்தை அழிக்கும்படி குரூரச் சட்டங்களை ஏற்படுத்தியிருந்தும் பிலிப் அஞ்சாமல் தைரியத்துடன் வேதம் போதித்து வந்தார். 

ஒரு நாள் இவர் கோவிலில் திரளான ஜனங்களைக் கூட்டி பிரசங்கம் செய்து கொண்டிருக்கையில், தேசாதிபதி கோவிலுக்குச் சென்று, அங்கிருந்தவர்களை வெளியே துரத்தி விட்டு, கோவிலைப் பூட்டி முத்திரையிட்டான். பிலிப் மறுநாள் கோவிலுக்கு வெளியே வேதத்தைப் போதித்துக்கொண்டிருக்கையில் அவரையும் செவேரஸ் என்னும் குருவானவரையும் எர்மேஸ் என்னும் டீக்கனையும் பிடித்து சிறையிலடைத்தான். 

பிறகு தேசாதிபதி கோவிலிலிருந்த பாத்திரம் முதலிய பொருட்களைக் கொள்ளையடித்து வேத புத்தகங்களைச் சுட்டெரித்தான். இச் செய்தியைக் கேள்விப்பட்ட பிலிப் இப்பேர்ப்பட்ட தேவ துரோகத்தைக் கட்டிக் கொண்டவர்கள் நித்திய நரகாக்கினைக்கு இரையாவார்களென்றார். 

அதிபதி பிலிப்புக்கு நயபயத்தைக் காட்டி பசாசுக்கு தூபம் காட்டும்படி கட்டளையிட்டும், அவர் அதற்குச் சம்மதியாததினால் அவரைச் சித்திரவதை செய்து, நெருப்பால் சுட்டுத் தீர்த்தான். 

இவருடைய இரு துணைவர்களும் மூன்று நாட்களுக்குப்பின் வேதசாட்சி முடி பெற்றார்கள். பிலிப் சாவதற்கு முந்தின நாள் ஒரு வெள்ளை மாடப் புறா பறந்து வந்து, சுவையான சிற்றுணவை அவருக்குத் தந்தது. இது தேவநற்கருணையென்று சில சாஸ்திரிகள் கூறுகிறார்கள்.

யோசனை

நாமும் வேத புத்தகங்களைச் சம்பாதித்து அவைகளைப் பக்தியுடன் காப்பாற்றி நாள்தோறும் வாசிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். நுனிலோவும் துணை., வே. 
அர்ச். டோனாதுஸ், மே.
அர்ச். மெல்லோ , மே.
அர்ச். மார்க், மே.