ஜுன் 22

அர்ச். ஆல்பன். வேதசாட்சி (கி.பி. 303) 

ஆல்பன் இங்கிலாந்து தேசத்தின் முதல் வேதசாட்சி. இவர் அஞ்ஞானியாயிருந்தும் ஏக தேவனை மாத்திரம் ஆராதித்து வந்தார்.

அக்காலத்தில் இங்கிலாந்து தேசம் உரோமை அரசாட்சிக்கு உட்பட்டிருந்தது. அத்தேசத்தில் வேத கலகம் உண்டானபோது ஒரு குருவானவர் சேவகர்களிடமிருந்து தப்பித்து ஆல்பன் வீட்டில் அடைக்கலம் புகுந்தார்.

ஆல்பன் அவரைத் தன் வீட்டில் ஒளித்து வைத்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து பராமரித்து வந்தார். மேலும் அவரால் ஆல்பன் சத்திய வேதத்தை அறிந்து ஞானஸ்நானம் பெற்றார்.

ஆல்பன் வீட்டில் மேற்கூறிய குருவானவர் ஒளிந்திருந்த செய்தியை அறிந்த அதிபதி அவரைப் பிடித்து வரும்படி சேவகரை அனுப்பினான். அப்போது ஆல்பன் குருவானவருடைய வஸ்திரத்தை தரித்துக்கொண்டு அதிபதியிடஞ் சென்று தான் கிறீஸ்தவனென்று அவனுக்கு அறிவித்தார்.

ஆல்பனால் தான் ஏமாற்றப்பட்டதையறிந்த அதிபதி சினங்கொண்டு தேவர்களுக்குத் தூபங் காட்டும்படி அவருக்குக் கட்டளையிட்டான். ஆல்பன் அதற்குச் சம்மதியாததினால் அவரைச் சிரச்சேதம் செய்யும்படி தீர்ப்பு கூறினான்.

அபரிதமான ஜனக்கூட்டம் கொலைக்களத்திற்கு ஆல்பனைப் பின்சென்றது. வெள்ளம் புரண்டோடும் ஆற்றின் பாலத்தின் மேலேறி ஜனக்கூட்டம் நடந்து சென்றதால் சீக்கிரத்தில் வேதசாட்சி முடி பெற வேண்டுமென்று ஆசித்து ஆல்பன் சர்வேசுரனை மன்றாடி ஆற்றில் இரங்கவே ஜலம் அங்குமிங்கும் பிரிந்து அவருக்கு வழி விட்டது.

இதைக் கண்ட கொலைஞன் தன் வாளைக் கீழே எறிந்து விட்டு, அவர் பாதத்தில் வீழ்ந்தான். இவர் கொலைக்களம் போய்ச் சேர்ந்தபின் அங்கு புதுமையாக உண்டான சுனை நீரைக் குடித்து, பின்பு ஒரு சேவகனால் கொல்லப்பட்டார்.

அக்கணமே அச்சேவகனுடைய கண் விழி தெரித்துக் கீழே விழுந்தது. இப்புதுமையைக் கண்டவர்களில் அநேகர் கிறிஸ்து நாதரை விசுவசித்தார்கள்.

அவர்களுக்குள் 1000 பேர் வரையில், ஆல்பன் வீட்டில் ஒளிந்திருந்த குருவானவருடன் வேறு தேசம் சென்று அங்கே வேதசாட்சிகளாய் மரித்தார்கள்.

யோசனை

பிறருக்கு உதவி புரிவதால் விசேஷ தேவ உதவியைப் பெறுவோம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பவுலினுஸ், மே.