அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 23

அர்ச்.சூசையப்பர் சேசு மாமரியன்னையின் கரங்களில் நன்மரணம் அடைந்ததை தியானிப்போம் 

தியானம் 

மனிதனாய் பிறந்த அனைவரும் இறக்க வேண்டும் என்பது சர்வேசுரனின் கட்டளை. ஆனால் அர்ச்.சூசையப்பர் நன்மரணம் அடைந்தார். மற்ற மனிதர்களைப்போல் மரணத்தை நினைத்து வருந்தாமல் மகிழ்ச்சியாய் இருந்தார், இறந்தார். மற்றவர்கள் உலக செல்வங்களிலும் மனைவி மக்கள் மேலும் அதிகபற்றும் பாசமும் வைத்திருப்பார்கள். அதனால் மரணம் பிரிக்கும்போது வேதனை அதிகமாக இருக்கும் 

மேலும் நமக்கு மோட்சமோ, நரகமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும் 

ஆனால் அர்ச்.சூசையப்பருக்கோ அவ்வித பயமோ துன்பமோ இல்லாமல் அவரது மரணம் பாக்கியமான மரணம் ஆகும் மாமரியன்னையையும் சேசுகிறிஸ்துவையும் விட்டுச்செல்ல வேண்டியிருப்பது பற்றி சற்று வருத்தமாக இருந்தாலும், அது சர்வேசுரனின் சித்தம் என்றும் அவர்களை விரைவில் சந்திக்கலாம் என்பதை அறிந்திருந்ததால் அது பெரிய விஷயமாக அவருக்குத் தெரியவில்லை. சர்வேசுரனின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தார் 

மானிடரான மற்ற குழந்தைகளைவிட அதிகமாய் தன் தந்தையை சேசு அன்புசெய்து மோட்சத்தில் அவருக்கு தயாராய் இருக்கும் அரியணையை காட்டி அவரை மகிழ்ச்சியாய் இருக்கச் செய்தார் சேசு தன் தந்தையாகிய அர்ச்.சூசையப்பரின் கையைப்பிடித்து, "அன்பு தந்தையே! நமக்காக எவ்வளவு துன்பப்பட்டீர், இப்போது இவ்வுலகைவிட்டு நமது தேசமாகிய மோட்சத்திற்கு இன்பங்களை அனுபவிக்க செல்வீராக என ஆசீர்வதித்தார். தன் மகனது ஆசீர்வாதத்தினை பெற்று தலையை சாய்க்கும்போது அவரது ஆன்மாவை சேசுவின் கையில் ஒப்படைத்து இன்பமான இறப்பினை அடைந்தார். அப்போது மாமரியன்னையோ படுக்கையருகே முழந்தாள் படியிட்டு செபித்துக் கொண்டிருந்தார்கள். அவர் இறந்ததும் வானதூதர்கள் அவரது ஆன்மாவை ஏற்று மோட்சத்துக்கு எடுத்துச் சென்றனர்

இத்தகைய மரணத்தை மரணம் என்று சொல்ல இயலுமா அல்லது இன்பத்தின் நிறைவால் வந்த சோர்வென்றோ, நல்ல தூக்கம் என்றோ கூறலாம். அர்ச்.சூசையப்பர் இறந்ததும் அவரது ஆன்மா வானதூதர்களால் அவரது மூதாதையர்களின் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது 

அர்ச்.சூசையப்பர் இத்தகைய நன் மரணத்தை அடைந்தபின்னர் அவரது மகனும், துணைவியும் அவர்மேல் மிகுந்த பாசம் வைத்திருந்ததால் மிகவும் மனம் வருந்தி அதிக நேரம் அழுதுகொண்டிருந்தார்கள் பின்பு அவரது திருஉடலை குளிப்பாட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, மரியாதையோடும் சிறப்போடும் அடக்கம் செய்து தங்கள் முன்னோர்களுடைய கல்லறையில் மிகுந்த மரியாதையோடும் வணக்கத்துடனும் வைத்தார்கள். 

கிறிஸ்தவர்களாகிய நாம்  அர்ச்.சூசையப்பருடைய பாக்கியமான நன்மரணத்திற்காக மகிழ்வதோடல்லாமல் நம்முடைய மரணமும் நன்மரணமாயிருக்க உயிரோடிருக்கும்போதே பார்த்துக்கொள்ள வேண்டும்.  அர்ச்.சூசையப்பர் இறக்கும்போது துன்பம், பயம் மற்றும் சந்தேகப்படுவதற்கு ஒரு காரணமும் இல்லாததால் சந்தோஷமாக இறந்தார் என அறிந்தோம். நமக்கும் இறுதியில் துன்பம், பயம் சந்தேகம் வராதபடி இவ்வுலக இன்பங்களில் அதிக ஈடுபாடு காட்டாமல் பிறருக்கு உதவியாக இருப்போம். பாவ வழிகளில் நடக்காமல், சர்வேசுரனை நேசித்து மோட்சத்தை அடைய விருப்புடன் இருக்க வேண்டும்.  அர்ச்.சூசையப்பருக்கு மாமரியன்னை, சேசு கிறிஸ்துவின் கரங்களிலே நன்மரணம் கிடைத்ததுபோல நமக்கும் அந்த பாக்கியம் கிடைக்க சேசுவின் மீதும் மாமரியன்னை,  அர்ச்.சூசையப்பரிடமும் மிகவும் பக்தியாக இருந்து நன்மரணம் கிடைக்க தொடர்ந்து செபிப்போம் 

அர்ச்.சூசையப்பர் மரணப்படுக்கையில் இருந்தபோது மாமரியன்னையும், சேசுவும் அவருக்கு ஆறுதலாக இருந்து பணிவிடைகள் செய்து கவனித்ததுபோல் கிறிஸ்தவர்களாகிய நாமும் நமது பெற்றோர், கணவன் / மனைவி, மகன் | மகள், உற்றார் உறவினர் மரணப்படுக்கையில் இருக்கும்போது அவர்களது உடலுக்கும் உள்ளத்திற்கும் தகுந்த கவனிப்பு அளிப்பதோடு ஆன்மாவுக்கும் தகுந்த ஆயத்தம் அளிக்க வேண்டும். தக்க தருணத்தில் குருவை அழைத்து நோய்வாய்ப்பட்டவரை ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்று நோயில் பூசுதல் அருட்சாதனத்தைப்பெற செய்விப்பது நமது கடமை. அத்துடன் நோய்வாய்ப்பட்டவர் இறக்குமளவும் அங்கே காத்திருந்து, அவருக்கு ஆறுதல் அளித்து செபங்களை காதில் ஒலிக்கச் செய்ய வேண்டும். பரிசுத்த திருக் குடும்பமே சேசுவே இரட்சியும், மாதாவே துணை, அர்ச்.சூசையப்பரே அடைக்கலம் என்ற சிறு செபங்களை அடிக்கடி கூற வேண்டும். இவ்வாறு நாம் பிறருக்குச் செய்தால் நமது இறுதி நேரத்தில் நமக்கும் இத்தகைய உதவிகள் கிடைக்கும் 

மாமரியன்னையும், சேசுகிறிஸ்துவும் இணைந்து அர்ச்.சூசையப்பரை நல்லடக்கம் செய்தனர். அதுபோல் நம்மைச் சார்ந்தவர்களுக்குச் செய்வது பெற்ற கடன் மட்டுமல்லாமல் சர்வேசுரனுக்கு ஏற்புடைய செயலுமாகும். கிறிஸ்தவ அடக்கச் சடங்குகளில் திருச்சபை சடங்குகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். இறந்தவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி நிறைவேற்றச் செய்வதோடு வறியோருக்கு தான தருமங்களும் செய்ய வேண்டும் 

கல்லறைக்கு எடுத்துச் சென்று செபங்களைச் சொல்லி திருச்சபை ஒழுங்கின்படி சடங்குகளை நிறைவேற்றி கல்லறையின் மேல் வெற்றியின் சின்னமான சிலுவையை ஊன்ற வேண்டும். பின்பு ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலியும் தான தருமங்களும் நிறைவேற்றுவோம் 

புதுமை 

08-07-1862 இல் இத்தாலி நாட்டிலுள்ள விசேன்சியா என்ற நகரத்தில் ஹங்கேரி நாட்டு சேவகனுக்கு ஒரு மனிதனை குத்திக் கொலை செய்ததற்காக மரண தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவன் கிறிஸ்துவை அறியாதவனும் இத்தாலி மொழி தெரியாதவனுமாக இருந்தான். இருப்பினும் அவனை மனந்திருப்ப குருவானவர் ஒருவர்  விரும்பினார். அதனால் மாமரியன்னையின் திரு உருவத்தையும்,  அர்ச்.சூசையப்பர் படத்தையும் சிறையில் அந்த அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு எடுத்துச் சென்றார். சிறைக் காவலர் தடுத்தபோதும் மாமரியன்னை,  அர்ச்.சூசையப்பர் பெயரைக் கூறி கொலையாளி அருட்பணியாளர் அறையின் உள்ளே சென்றார். அருட்பணியாளருக்கு ஹங்கேரிய மொழியும் கொலையாளிக்கு இத்தலிய மொழியும் தெரியாது. அதனால் இருவரும் பேசமுடியவில்லை. அருட்பணியாளர் மாமரியன்னையின் திருச்சுரூபத்தையும்  அர்ச்.சூசையப்பர் படத்தையும் காட்டி வானத்தை நோக்கி மனந்திரும்ப வேண்டுமென்று சைகையால் விளக்கி கிறிஸ்தவனாக வேண்டுமென்று சத்தமிட்டார் 

'கத்தோலிக்கு' என்ற வார்த்தை இரு மொழிகளிலும் உண்டு, அதனால் அவன் ஓரளவு புரிந்து கொண்டு, ஆம், நாளைக்கு ஆகுமென்றான். 

குருவானவர் திருப்தியாய் வெளிவந்து அர்ச்.சூசையப்பரையும், மாமரியன்னையையும், இன்னும் பல அர்ச்சியஷ்டவர்களிடமும் அவனுக்காக ஜெபித்தார். மறுநாள் மாமரியன்னைக்கு திருப்பலி ஒப்புக்கொடுத்தப்பின் சிறைக்குச் சென்று சேவகனிடம் அவன் மொழியில் பேசத் தெரிந்த ஒருவரைக் கொண்டு, அவன் மோட்சத்திற்கு செல்ல விரும்புகிறானா எனக் கேட்கச் செய்தார். அவன் விரும்புகிறேன் என்றதால் அவனிடம் மனம் மாறி கிறிஸ்தவ வேதத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்றார். அவன் சத்தமாய் நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன் என்றான். அதற்கு இரு சாட்சிகளை வைத்துக் கொண்டு, படைத்தலைவனிடம் அனுமதி பெற்று அவன் கிறிஸ்தவனாவதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார் 

ஹங்கேரிய மொழி தெரிந்த குரு ஒருவரை சேவகனிடம் அனுப்பி ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவனாக்கினார். அதன் பிறகு அவன் கிறிஸ்தவ மதத்தை புறக்கணிக்க தந்திரங்களையெல்லாம் செய்தனர். ஆனால் அவன் உறுதியாய் இருந்தான். மறுநாள் பிற சேவகர்கள் முன்னிலையில் நான் பொய்யான தெய்வங்களை வழிபடுவதை விட்டுவிடுகிறேன் என மீண்டும் மீண்டும் கூறி நற்கருணையைப் பெற்றுக் கொண்டான். அங்குள்ள ஆயர் அங்கு வந்து அவனுக்கு உறுதிப்பூசுதலை அளித்து அவன் பெயரை மாற்றிச் சூசைமாமரி என புது பெயரிட்டார் 

நான்காவது நாள் அவன் கொலைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு தூக்குமரத்தில் ஏறியபோது மக்களைப் பார்த்து, "நான் குற்றவாளி யானதால் இறப்பது சரியே. ஆனால் சேசுவின் திருப்பாடுகளின் பயனால் நான் மோட்சம் அடைவேன் என விசுவசிக்கிறேன்" என்றான். அவன் சேசுமரி சூசை என உச்சரித்தவுடன் தூக்கிலிடப்பட்டான். இவன் மனந்திரும்பியதால் அருகில் இருந்த மக்களனைவரும் பரிசுத்த திருக் குடும்பத்திற்கு புகழ்பாடினார்கள். 

பிறமதத்தவர்களும், கடவுளை நம்பாதவர்களும் மனந்திரும்ப  அர்ச்.சூசையப்பரிடம் மன்றாடுவோம் 

(1 பர, 3அரு, பிதா)

நன்மரணம் அடைய  அர்ச்.சூசையப்பரிடம் வேண்டும் செபம் 

இறை அருள் நிரம்பப் பெற்ற  அர்ச்.சூசையப்பரே! வாழ்க மனிதருள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய கன்னிமரியாயின் கனியாகிய சேசுவால் ஆசீர்வதிக்கப் பட்டவரே! கன்னிமரியாயின் பத்தாவாகிய அர்ச்.சூசையப்பரே உமது பக்தர்களும், பிள்ளைகளுமாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். சேசு மாமரியன்னை இவர்கள் கையில் மரணமடைந்தவர் நீரே! எங்களுக்கு இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் உதவியாகயிரும். 

ஆமென் 

இன்று சொல்ல வேண்டிய செபம்: 

நன்மரணமடைந்த  அர்ச்.சூசையப்பரே மரண நேரத்தில் எங்களுக்கு உதவியருளும் நன்மரணமடைந்த  அர்ச்.சூசையப்பரே எங்களுக்கு நன்மரணம் வர உதவியருளும் நன்மரணமடைந்த  அர்ச்.சூசையப்பரே எங்கள் ஆன்மாவை மோட்சம் சேர செய்தருளும். 

செய்ய வேண்டிய நற்செயல் 

ஒரு நோயாளி நன்மரணம் அடைய உதவிசெய்வது அல்லது இன்று மரணமடையப் போகிறவர்களுக்காக. 

(5 பர, 5அரு, பிதா) சொல்வது.