பிப்ரவரி 23

அர்ச். தமியான் இராயப்பர். மேற்றிராணியார் (கி.பி. 1072)

இவர் குழந்தையாக இருக்கும்போதே இவருடைய தாய் தந்தையர் இறந்தபடியால் வெகு கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்தார்.

இவர் சிறு வயதில் பன்றிகளை மேய்த்து உயிர்வாழ்ந்து வந்தார். இவர் கண்டெடுத்த ஒரு வெள்ளிப் பணத்தைத் தனக்கு வைத்துக்கொள்ளாமல் அப்பணத்தைக் கொண்டு தன் பெற்றோருடைய ஆத்துமத்திற்காகப் பூசை செய்வித்தார்.

குருவாயிருந்த இவருடைய சகோதரரால் வளர்க்கப்பட்டு எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டார். இவர் கல்வி சாஸ்திரத்தில் எவ்வளவு தேர்ந்து விளங்கினாரெனில், மற்றவர்களுக்கும் கல்வி கற்பிக்கும்படி நியமிக்கப்பட்டார். இவர் இந்த வேலையை செய்யும்போது மயிர் ஒட்டியாணம் தரித்துக் கடின தவம் புரிவார்.

இவருக்கு உண்டாகும் மோகச் சோதனையை ஜெயிக்கும்படி குளிர்ந்த ஜலத்தில் குதிப்பார். இவர் சில காலத்திற்குப்பின் உலக சுக செல்வங்களைத் துறந்துவிட்டு சந்நியாசியாகி, தமது பக்தி புத்தியினிமித்தம் அம்மடத்திற்கு சிரேஷ்டர் ஆனார்.

இவர் அநுசரித்த அரிதான புண்ணியங்களி னிமித்தம் பாப்புமார் இவருடைய ஆலோசனையைத் கேட்டு இவரைப் பல இடங்களுக்கு ஸ்தானாதிபதியாக அனுப்புவார்கள். இவர் கர்தினால் மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டபோது இந்த மேலான அலுவலை வெகு கவனத் துடன் செய்து அநேக கலகங்களை அடக்கி, பிரிவினைகளைத் தடுத்து, திருச்சபைக்காக ஊக்கத்துடன் உழைத்தார்.

இவர் செய்த கடும் பிரயாணத்தால் நோயுற்று பாக்கியமான மரணமடைந்தார்.

யோசனை

இறந்த நமது உறவினர்களை மறவாமல் அவர்களுக்காகத் திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுத்து ஞான ஆறுதல் வருவிக்கவேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். செரேனுஸ். வே.
அர்ச். மில்லர்ஜ், க.
அர்ச். போயிசில், ச.