அர்ச். செர்வுலுஸ் - துதியர் - (கி.பி. 590).
உரோமையில் பிச்சைக்காரரான செர்வுலுஸ் குழந்தையாய் இருக்கும்போதே, திமிர்வாத நோய் கண்டு உட்காரவும் படுக்கவும் கை கால்களை நீட்டவும் முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.
இந்த வியாதியால் உண்டான துன்பத்தையும் வேதனைகளையும் மிகவும் பொறுமையுடன் அனுபவித்து வந்தார். இதைக் குறித்து யார் மேலும் குறை கூறாமல், தேவ சித்தத்திற்குப் பணிந்து வாழ்ந்து வந்தார்.
ஏழையான இவருடைய தாயாரும் சகோதரனும், இவரை ஒரு கட்டிலில் வைத்து தூக்கிக்கொண்டு போய் அர்ச். கிளமென்ட் கோவில் வாசற்படியில் வைப்பார்கள். அங்கு வரும் கிறீஸ்தவர்கள் கொடுக்கும் தர்மத்தால் இவர்கள் தங்கள் வாழ்வை நடத்தி வந்தார்கள்.
இவர் இடைவிடாமல் ஜெபித்து ஞான கீர்த்தனைகளைப் பாடுவார். தம்மிடத்தில் உள்ள மீதியான பணத்தை தன்னைப் போன்ற பரதேசிகளுக்குக் கொடுப்பார்.
பொதுவாகப் பிச்சைக்காரர்களுக்குள் இருக்கும் பொய்ப்புரட்டு, சண்டித்தனம், மூர்க்கம் முதலிய துர்க்குணங்கள் இவரிடத்தில் காணப்படாததுடன், அதற்கு மாறாக எதார்த்தம், பொறுமை, தாழ்ச்சி முதலிய புண்ணியங்கள் இவரிடத்தில் விளங்கின.
தன் வியாதியால் உண்டாகும் கஷ்டத்தால் வேதனைப்பட்டு முனங்காமல், தேவ சித்தத்தால் இது உண்டானதென்று கூறி அந்த வேதனைகளைப் பொறுமையுடன் சகித்து, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பார்.
இக்கஷ்டத்தை வெகு காலம் அனுபவித்தபின், இவருக்கு மரண நேரம் நெருங்கியபோது, மற்றப் பிச்சைக்காரரைத் தம்மிடம் வரவழைத்து, அவர்களோடு தேவ ஸ்துதியைப் பாடுகையில், மோட்சானந்தப் பாடல்களை சம்மனசுக்கள் பாடுவதைக் கேட்டு, சந்தோஷத்துடன் உயிர் துறந்து அவர்களுடன் மோட்ச பிரவேசமானார்.
யோசனை
சௌக்கியத்திலும் வியாதியிலும், செல்வத்திலும் ஏழ்மையிலும் பாவத்திற்கு இணங்காமல் நடப்போமாகில், நாம் இரட்சணியமடைய அவை வழிவகுக்கும்.