ஜுன் 23

அர்ச். ஆய்க்னீஸ் மரியம்மாள். (கி.பி. 1213) 

இவள் ப்ரபாண்ட் நாட்டில் பிறந்து, தன்னுடைய பக்தியுள்ள தாயால் தர்ம வழியில் வளர்க்கப்பட்டாள்.

தனக்கு தேவையான படிப்பை முடித்துக் கொண்டு, தன்னைப் போல பக்தி விசுவாசமுள்ள ஒரு வாலிபனை திருமணம் செய்துகொண்டாள். அவ்விருவரும் தங்கள் ஊருக்குள் ஒரு இடத்தில் குஷ்டரோகிகள் முதலிய பிணியாளர்களை அழைத்துவந்து, அவர்களை பராமரித்து வந்தார்கள்.

இதைக் கண்டவர்கள் அவர்களைப் பழித்துப் பரிகாசம் செய்த போதிலும் தாங்கள் தொடங்கிய பிறர் சிநேக வேலையை விடாமல் செய்து வந்தார்கள்.

நாள்தோறும் கர்த்தருடைய திருப்பாடுகளைக் குறித்துத் தியானம் செய்வார்கள். திருப்பாடுகளைப்பற்றி மரியம்மாள் நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் சொரிந்து அழுவாள்.

இவள் ஒரு நாளைக்கு ஒரு தடவை கொஞ்சம் ரொட்டியும் கீரையும் புசித்து தபஞ்செய்து தன் சொத்துக்களை எல்லாம் வியாதிக்காரருக்கு செலவிடுவாள்.

இப்புண்ணியவதி சமையல் செய்யும்போதும், நூல் நூற்கும்போதும், மற்ற எவ்வித வேலைகளை செய்யும்போதும் நாவாலும் மனதாலும் ஜெபத்தியானஞ் செய்வாள்.

அந்நேரங்களில் அவளுடைய வேலைகளை சம்மனசுக்கள் செய்வார்கள். வீண் சம்பாஷனைக்கு இடம் கொடுக்க மாட்டாள். அடிக்கடி மிகவும் பக்தியுடன் நன்மை வாங்குவாள். அவளுக்கு உண்டாயிருந்த தேவ சிநேகத்தால் பரவசமாவாள்.

இப்புண்ணியவதியைப் பார்க்க வருகிறவர்கள் ஒருவித தேவ சிநேகத்தால் பற்றியெறிவார்கள். இவள் தீர்க்கதரிசன வரமும் ஞான அறிவும் பெற்றிருந்தும் தனக்கு ஒன்றும் தெரியாதென்று கூறி, பெரும் பாவியும் நீசமுமானவளென்று தன்னைப் நினைத்து, மோட்சத்தில் தேவ தரிசனையடைய ஆசைகொண்டு, தனக்கு 36 வயது நடக்கும்போது தன் சிருஷ்டிகரிடம் போய்ச் சேர்ந்தாள்.

யோசனை

இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களே! உங்களுக்குத் தேவையான புண்ணியத்தை இந்த அர்ச்சியசிஷ்டவளிடத்தில் கற்றுக்கொள்வீர்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். எதெல்ட்ரெடா, க.