ஆகஸ்ட் 23

அர்ச். பெனிட்டி பிலிப் - துதியர் (கி.பி. 1285) 

இத்தாலி தேசத்தில் பக்தியுள்ள பெற்றோரிடமிருந்து பிறந்த பிலிப் 5 மாதக் குழந்தையாயிருக்கையில் தமது வீட்டிற்கு தர்மம் கேட்டு வந்த வியாகுல மாதா சபை குருக்களுக்கு தர்மம் கொடுக்கும்படி புதுமையாக வாய் திறந்து தன் தாயாரிடம் கூறினார்.

தன் பக்தியுள்ள தாயாரால் தேவ பயத்தில் வளர்க்கப்பட்ட இவர் உயர்ந்த கல்வி கற்று முடித்தபின், மருத்துவ துறையில் தேர்ந்து வைத்தியம் செய்யும்போது, ஏழைகளுக்கு இலவசமாக மருந்து கொடுப்பார்.

தேவ ஏவுதலால் இவர் உலகத்தைத் துறந்து வியாகுல மாதா சபையில் தன்னைத் தவச் சந்நியாசிகளுடன் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு, அதில் சேர்ந்து, மடத்து சமையல் வேலை, தோட்ட வேலை முதலிய தாழ்மையான வேலைகளை மகா தாழ்ச்சியுடன் செய்து வந்தார்.

சிரேஷ்டர் இவருடைய புத்தி சாமர்த்தியத்தையும் புண்ணியத்தையுங் கண்டு, குருப்பட்டம் பெறும்படி கட்டளையிட்டார். குருப்பட்டம் பெற்றபின், இவர் புண்ணிய வழியில் நடந்து விரைவில் மடத்திற்கு சிரேஷ்டரானார்.

அக்காலத்திலிருந்து போன பாப்பாண்டவருக்குப் பதிலாக தம்மைக் கர்தினால்மார் பாப்புவாகத் தெரிந்துகொள்ள இருப்பதைப்பற்றி கேள்விப் பட்ட பிலிப் காட்டில் போய் ஒளிந்துகொண்டார். 10-ம் கிரகோரியார் பாப்புவாகத் தெரிந்துகொள்ளப்பட்டபின் பிலிப் மடத்திற்கு திரும்பினார்.

இவர் தபத்திலும் புண்ணியத்திலும் வாழ்ந்து, வெளியூர்களுக்குச் சென்று, பிரசங்கம் செய்து, குழப்பங்களை அடக்கி, தேசப் போர்களை தடுத்து பாவிகளை மனந்திருப்பி எங்கும் சமாதானமுண்டாகும்படிச் செய்தார்.

இவர் கர்த்தருடைய பாடுகளின் மீதும் தேவமாதாவின் வியாகுலத்தின் மீதும் அதிக பக்தி வைத்து, வெகு நேரம் ஜெபத்தியானத்தில் காலத்தைச் செலவழிப்பார். இவர் அவஸ்தையாயிருக்கும்போது பாடுபட்ட சுரூபத்தைக் கையில் பிடித்து முத்திசெய்து, கண் மூடி பரலோக பிராப்தியானார்.

யோசனை 

நாமும் நமது ஒன்றுமில்லாமையை உணர்ந்து தாழ்ச்சியென்னும் சிறந்த புண்ணியத்தை அனுசரிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். கிளாடியுஸும் துணை., வே.
அர்ச். அப்பொல்லினாரிஸ், மே.
அர்ச். தெயோனாஸ், அதிமே.