அர்ச். சிலுவை அருளப்பர் துதியர் - (கி.பி. 1591).
ஜான் என்று அழைக்கப்படும் அருளப்பர், பால் குடிக்கும் வயதிலேயே, தேவதாயார் மட்டில் பக்தி கொண்டிருந்தார். இவர் பள்ளியில் படிக்கும்போது மருத்துவமனைக்குப் போய் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்வார்.
இவர் சிறுவனாயிருக்கும்போது ஐம்புலன்களை அடக்கி ஒறுத்தல் முயற்சி செய்வார். உலகத்தின் மீது வெறுப்புற்று தேவமாதாவின் சபையாகிய கார்மேல் மடத்தில் சேர்ந்து, தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலிய புண்ணியங்களைச் சகலரும் அதிசயிக்கும் வண்ணம், உத்தமமாய் அனுசரித்து வந்தார்.
கர்த்தருடைய பாடுகளின் மட்டில் இவருக்குள்ள பக்தியால், சிலுவை அருளப்பர் என்னும் பெயரை வைத்துக்கொண்டார். இவர் குருப்பட்டம் பெற்ற பின், ஒரு மடத்திற்கு அதிபராகி, அந்த மடத்திலுள்ள குறைகளைச் சீர்ப்படுத்த முயற்சிக்கும்போது, அநேகர் இவர்மேல் பிரியமும், சிலர் வெறுப்புங் கொண்டார்கள்.
இதனிமித்தம் இவர் அநியாயமாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு மடத்தின் சிறையில் வைக்கப்பட்டார். ஆனால் அருளப்பர் சிறிதும் குறை கூறாமல், ஆண்டவரைத் துதித்தார். விரைவில் அவர் அதிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, புண்ணியச் செயல்களையும் தவக் காரியங்களையும் புரிந்துவந்தார்.
இவருடைய தபக்கருவிகளைக் காண்போர் பயப்படுவார்கள். கர்த்தர் இவருக்குக் காணப்பட்டு: "நீ நமக்காக அனுபவித்த நிந்தை அவமானத்திற்குக் கைம்மாறாக, உனக்கு என்ன சம்பாவனை வேண்டும்" என்று கேட்டதற்கு, "ஆண்டவரே! இன்னும் அதிக நிந்தை அவமானம் வேண்டும்" என்றார்.
சிலுவையைப் பார்க்கும்போது பரவசமாவார். பூசை நேரத்திலும் பாவசங்கீர்த்தன நேரத்திலும் இவர்மேல் அதிசயமான ஒரு பிரகாசம் ஜொலிப்பதை ஜனங்கள் கண்டு பிரமிப்படைவார்கள்.
இவர் வியாதியுற்றபோது, மற்றவர்களால் உண்டான கஷ்டங்களையும், சிலுவைகளையும்; பொறுமையுடன் சகித்து, சிலுவையைக் கையிலேந்தி, உயிர் துறந்து, மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
யோசனை
நமது சிலுவையாகிய துன்பதுரிதம், வியாதி, வறுமை, இடையூறுகளைப் பொறுமையுடன் சகிப்போமாக.