அக்டோபர் 24

அதிதூதரான அர்ச். இரபேல் சம்மனசுவின் திருநாள்

நவவிலாச சம்மனசுக்களில் இரபேல் சம்மனசானவர் அதிதூதர்களில் ஒருவர். இரபேல் என்னும் பதத்திற்கு தேவ சஞ்சீவி என்று அர்த்தம். 

பூர்வ காலத்தில் பெரிய தோபியாஸ் என்னும் புண்ணியவாளர் தூர தேசத்தில் தான் ஒருவருக்குக் கொடுத்தக் கடனை வாங்கி வரும்படி தன் மகன் சின்ன தோபியாஸை ஒரு நம்பிக்கையுள்ள துணையுடன் அனுப்பி வைத்தார். 

அந்தத் துணைவரான இரபேல் சம்மனசு ஒரு வாலிபன் உருவத்தில் சின்ன தோபியாஸுக்கு தோன்றி, அவரை தூர தேசத்திற்கு சிரமமின்றி கூட்டிக் கொண்டு போகையில் ஓர் ஆற்றில் சின்ன தோபியாஸ் இறங்கியபோது, அவரை விழுங்க வந்த மச்சத்தை சம்மனசானவர் இழுத்து வெளியே போட்டார். 

பின்பு அதன் உடலிலுள்ள பிச்சை வெளியே எடுத்து, அதை பத்திரப்படுத்திக் கொள்ளச் சொன்னார். அவருடைய உறவினளான ஒரு பெண்ணிடத்திலிருந்த பசாசை ஓட்டி அவளை அவனுக்கு மணமுடித்து வைத்தார். இதற்கு முன் 7 கணவர்கள் இவளைத் திருமணம் செய்தபோது, திருமணமான இரவே அவர்கள் இறந்து போனார்கள். 

அதுபோல சின்ன தோபியாஸும இறந்து விடுவார் என்று எதிர்ப்பார்த்திருந்த அவ்வூரார் அவர் சாகாதிருந்ததைக் கண்டு ஆச்சரியப் பட்டார்கள். சகலத்தையும் ஒழுங்காய் முடித்துக்கொண்டு, வரவேண்டிய பணத்தையும் வசூலித்துக்கொண்டு இரபேல் சம்மனசானவர் சின்ன தோபியாஸை தன் தகப்பனிடம் கூட்டிக்கொண்டுபோய் விட்டார். 

வெகு காலம் கண் தெரியாமலிருந்த பெரிய தோபியாஸ் கண்ணுக்கு மேற்கூறிய பிச்சைக் கொண்டு கண் பார்வை அளித்தார். இவ்வளவு நன்மை உபகாரங்களைப் புரிந்த அந்தத் துணைவருக்கு தங்களுக்குண்டாயிருந்த ஆஸ்தியில் பாதியை கொடுக்கப் போகையில், தாம் இரபேல் சம்மனசு என்று வெளிப்படுத்தி மறைந்தார்.

யோசனை

பிரயாணிகள் வழியில் தங்களை அபாயமின்றி காப்பாற்றும்படி இரபேல் சம்மனசானவரைப் பார்த்து வேண்டிக்கொள்ள வேண்டும். திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளும் இந்த அதிதூதருடைய விசேஷ உதவியை கேட்கக் கடவார்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ப்ரோக்ளுஸ், து. 
அர்ச். பெலிக்ஸ், மே. 
அர்ச். மாக்லோர், மே.