மார்ச் 24

அர்ச். இரேனேயுஸ். மேற்றிராணியார், வேதசாட்சி (கி.பி.340)

இவருடைய சிறந்த புண்ணியங்களினாலும், சாஸ்திர ஆராய்ச்சியினாலும் இவர் மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார்.

இவர் வேத கலகத்தில் பிடிபட்டு, சிறையிலடைபட்டு, கொடூரமாய் உபாதிக்கப்பட்டபோது, வேதத்தில் உறுதியாய் இருந்தார்.

இவருடைய தளராத தைரியத்தைக் கண்ட அதிபதி இவரை இரும்பு ஆணிகளுள்ள கட்டிலில் கிடத்தி, இவருடைய கை கால் களைச் சங்கிலிகளால் கட்டி மூட்டு பிசக இழுக்கும்படி கட்டளையிட்டான்.

"சக்கரவர்த்தியின் கட்டளைப்படி தேவர்களுக்கு துாபங் காட்டுவாயா” என்று வினவியதற்கு, "பசாசை ஆராதித்து நரக நெருப்பில் வேக மாட்டேன்” என்றார்.

அந்நேரத்தில் வேதசாட்சியின் சிநேகிதரும் தாயார் முதலிய பந்துக்களும் அவரை அணுகி கண்ணீர்விட்டு அழுது, வேதத்தை விடும்படி துர்ப்புத்தி சொல்வதை அவர் கேளாதிருந்ததைக் கண்ட அதிபதி, அவரை நோக்கி, 'இங்கே அழுது புலம்பும் உன் உறவினரைப் பார்த்து வேதத்தை மறுதலி” என்றான்.

அதற்கு வேதசாட்சி, “இவர்கள் என் உறவினர்களல்ல, எவனாகிலும் என்னிலும் தன் தாய், தகப்பன், மனைவி, பிள்ளை முதலியவர்களை அதிகமாய் நேசிப்பானாகில் அவன் எனக்கு உரியவனல்ல” என்று சேசுநாதர் திருவுளம் பற்றியிருக்கிறார் என்றார்.

அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட அதிபதி வெட்கி, அவரை உபாதித்து சிரச்சேதம் செய்து, அவர் சரீரத்தை ஆற்றில் எறிந்து போடும்படி தீர்ப்பளித்தான். அவ்வாறே கொலைஞர் அவருடைய தலையை வெட்டி நதியில் எறியவே, அவருடைய திரு ஆத்துமம் மோட்சானந்த பேரின்பத்தில் பிரவேசித்தது.

யோசனை

நம்முடைய சிநேகிதர் அல்லது உறவினர்கள் யாதொரு சத்திய வேதக் கட்டளையை மீறும்படி நமக்குத் துர்ப்புத்தி சொன்னால், இந்த வேதசாட்சியைப் போல் அவர்களுக்கு இணங்காதிருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஸைமன், வே.
அர்ச். வில்லியம், வே.