அர்ச். மத்தியாஸ். அப்போஸ்தலர்
அர்ச். மத்தியாஸ் 72 சீஷர்களுள் ஒருவராவார். இவர் சேசுநாதரைப் பின்தொடர்ந்து அவருடைய போதனையைக் கேட்டுப் புதுமைகளைக் காண பாக்கியம் பெற்றார்.
யூதாஸ் இஸ்காரியோத் கெட்டுப்போனதினால் அவனுக்குப் பதிலாக ஒருவரை ஏற்படுத்த அர்ச். இராயப்பர் எண்ணினார், அவர் விசுவாசிகளைக் கூட்டமாகக் கூட்டி, கெட்டுப்போன யூதாஸுக்குப் பதிலாக வேறொருவரை அப்போஸ்தலராக நியமிக்க விரும்பினார்.
வேதத்தில் கூறப்பட்ட தீர்க்கத்தரிசனத்தை அவர்களுக்கு எடுத்துக் காட்டி, பர்னபாஸ், மத்தியாஸ் ஆகிய இவ்விருவரில் ஒருவரைத் தெரிந்துகொள்ளும்படி கூறினார். அவ்வாறே அங்கு கூடியவர்கள் போட்ட திருவுளச்சீட்டு மத்தியாஸ் பெயருக்கு விழுந்தமையால், அவர் அப்போஸ்தலராக நியமகம் பெற்றார்.
அர்ச். மத்தியாஸ் கப்பதோசியா நாட்டுக்குச் சென்று சொல்லொண்ணா கஷ்டங்கள் பட்டு, வேதம் போதித்து, நல்ல புத்திமதியாலும் புதுமைகளாலும் அநேகரைச் சத்திய வேதத்தில் மனந்திருப்பினார்.
அவர் அரிதான புண்ணியங்களையும் கடுந் தபங்களையும் புரிந்து தம்மை இடைவிடாமல் ஒறுத்து, வேதத்திற்காக இரத்தம் சிந்தி மரித்தார்.
யோசனை
நாம் யாதொரு கடின வேலையையும் ஜெபத்துடன் தொடங்குவது நன்று. சில சமயங்களில் தேவ ஏவுதலால் ஒரு காரியத்தை திருவுளச் சீட்டால் தீர்மானிப்பதுண்டு. ஆனால் நமது இஷ்டப்படி அவ்வாறு செய்வது தவறாகும்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். மொன்தானுஸும் துணை. வே.
அர்ச். லெதார்ட். து.
அர்ச். இராபர்ட், கு.
அர்ச். பிரிக்ஸ், வே.
அர்ச். எதெல்பெர்ட், து.