மே 24

அர்ச். தோனாசியனும் ரோகாசியனும். வேதசாட்சிகள் (கி.பி. 287)

கூடப்பிறந்த சகோதரர்களான இவ்விருவரும் பிரான்ஸ் தேசத்தின் சுதேசிகள். தோனாசியன் சத்திய வேதத்தை அறிந்து ஞானஸ்நானம் பெற்று, உத்தம கிறீஸ்தவராய் புண்ணியவழியில் நடந்தார்.

அஞ்ஞானிகளுக்கு சத்திய வேதத்தின் மாட்சிமையை அறிவித்து அதில் சேரும்படி புத்தி சொல்லி வந்தார்.

இன்னும் அஞ்ஞானியாய் இருந்த அவருடைய தமயனான ரோகாசியன் தன் சகோதரன் எடுத்துக்காட்டிய நியாயங்களால் திருப்தியடைந்து, வேதத்தில் சேர மனதாயிருந்தும், தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கக் குருவானவர் கிடைக்காத தினால், துக்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

வேதக்கலக காலத்தில் தோனாசியன் தன் புத்திமதியால் அநேக அஞ்ஞானிகளை மனந்திருப்பிய செய்தியை அறிந்த நாட்டு அதிகாரி அவரைப் பிடித்து சிறையிலடைத்தான்.

ரோகாசியனும் தான் கிறீஸ்தவனென்று கூறியதால், அவரும் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டார். இரு சகோதரரும் சிறையில் சர்வேசுரனை மகா பக்தியுடன் வேண்டிக்கொண் டிருந்தார்கள்.

தான் ஞானஸ்நானம் பெறாததினால் ரோகாசியன் மனவருத்தப் பட்ட போதிலும், தன் சகோதரன் தனக்குத் தந்த சமாதான முத்தத்தால் திருப்தியடைந்து, மறுநாள் இரு சகோதரர்களும் நடுவனால் விசாரணை செய்யப் பட்டு கொடூரமாய் உபாதிக்கப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டதினால் இருவரும் இரத்த ஞானஸ்நானம் பெற்று வேதசாட்சிகளாய் மரித்தார்கள்.

யோசனை 

சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் பிரியமான காரியங்கள் மூன்று. அவையாவன:

1-வது சகோதரர்களுக்குள்ளே நேசப் பற்றுதல், 
2-வது பெற்றோர் மட்டில் அன்பு, 
3-வது கனவன் மனைவிக்குள் நேச பந்தனம்.


இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். லெரின்ஸ் வின்சென்ட், து.
அர்ச். ப்ராதோ ஜான், வே.