அர்ச். கிறீஸ்தினம்மாள் - கன்னிகை, வேதசாட்சி (3-ம் யுகம்)
உரோமையில் மிகவும் மகிமையும் வல்லமையுமுள்ள நடுவனுடைய குமாரத்தியான கிறீஸ்தினா அஞ்ஞான மதம் பொய் மதமென்று அறிந்து, கிறீஸ்தவ வேதத்தைக் கற்றறிந்து, தன் தந்தைக்குத் தெரியாமல் ஞானஸ்நானம் பெற்றாள்.
அஞ்ஞான குருட்டாட்டத்தில் மூழ்கியிருந்த அவள் தந்தை அநேக பொன் விக்கிரகங்களைத் தன் அரண்மனையில் வைத்து, அவைகளுக்கு ஆராதனை செய்து வந்தான். விக்கிரக ஆராதனையை அருவருத்த கிறீஸ்தினா அந்தச் சிலைகளை உடைத்துப் பொன் துண்டுகளை ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டாள்.
தன் மகள் கிறீஸ்தவளானதையும் அவள் தன் தேவர்களை நாசம் செய்ததையும் அறிந்த நடுவன் கோபத்தால் பொங்கி, அவள் வேதத்தை விடும்படி தடிகளால் அவளை நிஷ்டூரமாய் அடித்தான்.
அவள் வேதத்தில் உறுதியாய் இருந்தமையால், அவள் உடலை இரும்புச் சீப்புகளால் வாரிக் கிழித்து, அவளை ஒரு தூணில் கட்டி, அவளைச் சுற்றிலும் நெருப்பை மூட்டக் கட்டளையிட்டான். நெருப்பு அங்கு நின்றவர்களைச் சுட்டதே ஒழிய அவளைத் தொடவில்லை.
இதைக் கண்ட இரக்கமற்ற தகப்பன் அவளுடைய கை கால்களை கட்டி, ஒரு குளத்தில் எறியக் கட்டளையிட்டான். வேதசாட்சி தண்ணீரில் மூழ்காமல் மிதப்பதை நடுவன் கண்டு கோபவெறியால் மதி மயங்கி, வேரற்ற மரம் போல் கீழே விழுந்து செத்தான்.
இவனுக்குப் பதிலாக வந்த நடுவன் அவளை ஒரு காளவாயில் போட்டு சுட்டெரிக்கக் கட்டளையிட்டான். ஐந்து நாட்கள் கிறீஸ்தினா அதில் யாதொரு ஆபத்துமின்றி இருந்தபடியால் அதிகாரி அவளைப் பலவாறு உபாதித்து அம்பால் எய்து கொல்லக் கட்டளையிட்டான்.
யோசனை
நமது இருதயத்திலுள்ள மிதமிஞ்சின பொருளாசை, சிற்றின்ப ஆசை, விக்கிரக ஆராதனையை அருவருத்து தள்ளுவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். லூபுஸ், மே.
அர்ச். பிரான்ஸிஸ் சொலானோ, து.
அர்ச். அர்ச். ரோமானுஸும் துணை. வே
அர்ச். உல்பாதும் துணை., வே.
அர்ச். லேவின், க.வே.
அர்ச். டெக்லான், மே.