ஆகஸ்ட் 24

அர்ச். பர்த்தலோமே

அப்போஸ்தலர் பர்த்தலோமே அல்லது நத்தானியேல் என்பவர் கர்த்தருடைய பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவர். நமது ஆண்டவர் இவருடைய கபடற்ற தனத்தைப் புகழ்ந்து பேசினார். 

சேசுநாதருடைய பிரசங்கங்களையும் புதுமை களையும் கண்ட பர்த்தலோமே தர்ம வழியில் உத்தமராய் நடந்தார். கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் பர்த்தலோமே இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதல்படி சின்ன ஆசியாவில் பல இடங்களில் வேதம் போதித்து, அர்மீனியா தேசத்திற்குச் சென்று அநேகரை சத்திய வேதத்தில் சேர்த்துக்கொண்டார். 

அத்தேசத்து பேய் கோவிலில் இருந்த பசாசு பர்த்தலோமேயைக் கண்டவுடன், அருள் வாக்குக் கொடுக்காமல், கிறீஸ்தவ வேதமே சத்திய வேதமென்று கூறியது. அத்தேசத்து அரசனும் ஜனங்களும் அந்தச் சிலையைக் கீழே இழுத்துத் தள்ளினார்கள். 

அப்போது அதிலிருந்த பசாசு அவலட்சண ரூபமாய்க் காணப்பட்டு ஓடிப் போனது. இதைக் கண்ட அரசனும் பிரஜைகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள். வேறொரு தேசத்தின் அரசன் தன் பூசாரிகளால் தூண்டப்பட்டு அப்போஸ்தலரைக் கபடமாய்த் தன் தேசத்திற்கு வரவழைத்து, அவரை நிஷ்டூரமாய் வேதனைப்படுத்தி கொல்லும்படி தீர்ப்பு கூறினான். 

கொலைஞர் பர்த்தலோமேயை உயிருடன் தோலுரித்து சிலுவையிலறைந்து கொன்றார்கள். இந்த கெட்ட அரசன் மேலும், பூசாரிகள் மேலும் பசாசு ஆவேசமாக ஏறி 30 நாட்கள் வரையில் அவர்களை நிஷ்டூரமாய் உபாதித்துக் கொன்று விட்டது.

யோசனை 

பர்த்தலோமேயை நாமும் கண்டுபாவித்து கபடு, தந்திரத்தை விலக்கி, நேர்மையுடன் எதார்த்தவாதிகளாய் இருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

யூட்டிக்காவின் வேதசாட்சிகள். 
அர்ச். க்யென், மே.
அர்ச். இர்ச்சார்ட், மே.