அர்ச். ஸ்நாபக அருளப்பர்.
பப்டிஸ்ட் ஜான் அல்லது ஸ்நாபக அருளப்பர் என்பவர் அர்ச்.சக்கரியாஸ், அர்ச்.எலிசபெத்தம்மாளாகிய இவர்களின் குமாரர். இவருடைய அற்புதமான பிறப்பின் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
எலிசபெத்தம்மாள் வயதாகி மலடியாயிருக்கும் காலத்தில் பழைய வேதத்தின் குருத்தொழிலை வகித்து வந்த அவருடைய கணவரான சக்கரியாஸ் ஒரு நாள் தேவாலயத்தில் தூபங் காட்டும்போது கபிரியேல் சம்மனசானவர் அவருக்குத் தோன்றி உமது மனைவி கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு அருளப்பர் என்னும் பெயரிட வேண்டும்.
அவர் கர்த்தருக்கு முன்னோடியாய் இருப்பாரென்று அறிவித்தார். சம்மனசு கூறியபடி அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு அருளப்பர் என்று பெயரிடப்பட்டது.
அருளப்பர் சிறு வயதிலே வனவாசஞ் செய்து, ஒட்டகத் தோலை ஆடையாகத் தரித்து, வெட்டுக்கிளியையும் காட்டுத் தேனையும் ஆகாரமாகப் புசித்து கடுந்தவம் புரிந்து வந்தார்.
நமது கர்த்தர் வேதம் போதிப்பதற்கு முன்னதாய் அருளப்பர் ஜனங்களுக்குப் பிரசங்கஞ் செய்து கர்த்தருடைய வருகையை அவர்களுக்கு அறிவித்துத் தங்கள் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு தபம் செய்யும்படி போதித்தார்.
“வரவிருக்கும் கர்த்தர் நீர் தானோ?” என்று யூதர் அருளப்பரை வினவியபோது “நானல்ல. அவர் எனக்குப் பின் வருவார்; நான் அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்க்கப் பாத்திரவானல்ல” என்றார்.
ஒரு நாள் அருளப்பர் கர்த்தரைக் கண்டபோது யூதரைப் பார்த்து; “இதோ அவர் தான் உலக இரட்சகர், சர்வேசுரனுடைய செம்மறிப்புருவை” என்று கூறி கர்த்தருடைய வழியை முஸ்திப்பு செய்தார்.
யோசனை
பிறரைப் புகழுவதால் நமக்கு மகிமைக் குறைவு உண்டாவதாகத் தோன்றினாலும், நாம் உண்மையை மறைக்கலாகாது.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். பர்த்தலோமே, ம.