மங்களவார்த்தைத் திருநாள்.
சுதனாகிய சர்வேசுரன் மனிதாவதாரம் எடுத்து கெட்டுப்போன மனித சந்ததியை இரட்சிக்கக் காலஞ் சமீபித்தபோது, இச்சுப செய்தியை அறிவிக்கும்படி சம்மனசுகளுக்குள் பிரதான சம்மனசான கபிரியேல் சர்வேசுரனால் தெரிந்துகொள்ளப்பட்டார்.
இராஜ கோத்திரத்தாளாயிருந்தும், உலக நன்மை பாக்கியங்களைத் துறந்து, ஜென்ம பாவமின்றி உற்பவித்து, தேவ இஷ்டப்பிரசாதங்களை நிரம்பப் பெற்றிருந்த மரியாள் என்னும் ஒரு கன்னிகையிடம் கபிரியேல் சம்மனசு ஓரு வாலன் ரூபமாகக் காணப்பட்டு, “அருள் நிறைந்தவளே, வாழ்க” என்றார்.
ஒரு வாலன் தன்னிடம் தனிமையாய் நிற்பதைக் கண்ட கன்னி மரியாள் கலங்கினாள். அப்போது சம்மனசானவர் அவளுக்குத் தைரியமான வார்த்தைச் சொல்லித் தேற்றி, அவளிடத்தில் சுதனாகிய சர்வேசுரன் மனிதாவதாரம் எடுக்கவிருக்கும் பரம இரகசியத்தை அவளுக்கு அறிவித்தார்.
அதற்கு அவள் நான் கன்னியாஸ்திரீயாயிருக்க சர்வேசுரனுக்கு வார்த்தைப்பாடு கொடுத்திருப்பதால் என்னிடம் எப்படி குழந்தை பிறக்குமென்று அதிசயித்தாள்.
அதற்கு சம்மனசானவர் நீர் புருஷனை அறியாமலே இஸ்பிரீத்துசாந்துவின் விசேஷ கிருபையால், சுதனாகிய சர்வேசுரனை உமது உதரத்தில் மனிதனாக கர்ப்பந் தரித்து அற்புதமாய்ப் பெற்றெடுப்பீர் என்று கூறியதைக் கேட்ட மரியம்மாள், இதோ, ஆண்டவருடைய அடிமையானவள், உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவதென்றாள்.
அக்கனமே கன்னி மரியாயின் உதரத்தில் சர்வேசுரன் ஒரு சரீரத்தை உண்டாக்கி ஒரு ஆத்துமத்தையும் சிருஷ்டித்தார்.
இவ்வாறு ஒன்றாகக் கூடிய ஆத்தும் சரீரத்தில் சுதனாகிய சர்வேசுரன் சேர்ந்து ஐக்கியமானார்.
யோசனை
கன்னித்தாயின் கன்னிமையையும் தாழ்ச்சியையும் கண்டு அதிசயித்து அப்புண்ணியங்களை அநுசரிக்க பிரயாசைப்பட்டு, திரிகால ஜெபம் ஜெபிக்கும் போது சர்வேசுரன் மனிதனான இரகசியத்தை நினைவு கூறுவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். கம்மின், ம.