பிப்ரவரி 25

அர்ச். தாராசியுஸ். பிதா (கி.பி. 806) 

இவர் உத்தம கோத்திரத்தினின்று பிறந்து, அந்நகரத்து நீதிபதியான தன் தகப்பனாராலும் தன் தாயாராலும் தரும் வழியில் வளர்க்கப்பட்டார். துஷ்டர் சகவாசத்தை விட்டுவிட்டு நன்னெறியாளர்களின் கூட்டத்தை தேடும்படி இவர் தாய் இவருக்குப் புத்தி புகட்டுவாள்.

இவர் கல்வி கற்றபின் இவருடைய சாமர்த்தியத் திறமையினிமித்தம் இராஜ அரண்மனையில் அநேக உத்தியோகங் களைப் பார்த்து இராயனுக்கு பெரிய மந்திரியாக நியமிக்கப்பட்டு வெகு கவனத்துடன் அவ்வேலையைச் செய்துவந்தார்.

கொன்ஸ்தாந்தினோபளியின் பிதாப்பிதாவின் ஸ்தானம் இவருக்குக் கொடுக்கப்பட்டபோது, திருச்சுரூபம், படம் முதலியவைகளை அழிக்கும் பதிதர் அந்நகரில் ஏராளமாயிருந்தபடியால், மேற்றிராணிமாரின் பொதுக்கூட்டம் ஒன்றைக் கூடி மேற்கூரிய பதிதர் படிப்பினையை விசாரித்தாலொழிய அந்தப்பட்டத்தை அங்கீகரிப்பதில்லையென்று சொன்னார்.

இவருடைய மனதின்படி சகலமும் திருப்தியாய் நிறைவேறின பின்பு தாராசியுஸ் பிதாப்பிதாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். இவர் அநேக மேற்றிராணிமாரை சங்கமாகக் கூட்டி, திருச்சுரூபங்களை வணங்கக் கூடாதென்பது பதித படிப்பினையென்று தீர்ப்பிட்டு, இந்தத் தீர்ப்பை பாப்பானவருக்கு அனுப்பியபோது, அவரும் அதை அங்கீகரித்தார்.

தாராசியுஸ் தமது ஞான வேலையைப் பிரமாணிக்கத்துடன் புரிந்து தமது ஜெப தபத்தாலும் புண்ணியங் களாலும் கிறிஸ்தவர்களுக்கு ஞானக் கண்ணாடியாய் விளங்கினார்.

அத்தேசத்து அரசன் தன் மனைவியை நீக்கிவிட்டு வேறொருத்தியை மணமுடித்துக்கொள்ள இருப்பதை இவர் அறிந்து, அதற்கு மறுப்பு தெரிவித்ததினால் அரசனுடைய கோபத்திற்கு உள்ளான போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் சர்வேசுரனுக்கு மாத்திரம் பிரியப்பட்டு நடந்தார்.

பதித இராயன் மறுபடியும் சுரூபங்களைத் தகர்க்கத் தலைபட்டபோது அர்ச்சியசிஷ்டவர் ஒரு சம்மனசுடன் பதித இராயனுக்கு கனவில் தோன்றி பதித மதத்தை விடும்படி பயமுறுத்தியும் அதை அவன் விடாததினால் 6 நாட்களுக்குப்பின் தன் தேசத்தையும் உயிரையும் இழந்தான்.

அர்ச். தாராசியுஸ் ஆத்தும் இரட்சண்யத்திற்காக அநேக வருடங்கள் உழைத்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.

யோசனை

நாமும் துஷ்டர் சகவாசத்தை விலக்கி நேர்மையுள்ளவர்களாக வாழ்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். விக்டோரினுஸும் துணை. வே.