அர்ச். கிறிசாந்துஸும் தாரியாவும் - வேதசாட்சிகள் (கி.பி. 237)
துரை மகனான கிறிசாந்துஸ் அஞ்ஞானிகளான பெற்றோரிடமிருந்து பிறந்து, கல்வியில் தேர்ந்து, சாஸ்திரங்களைக் கற்றறிய ஆவல்கொண்டு, தன் கைக்குக் கிடைக்கும் புத்தகங்களை கவனமாய் வாசித்து வருவார்.
தற்செயலாய் அவருக்குக் கிடைத்த சுவிசேஷ புத்தகத்தை வாசித்தபின், கிறிஸ்தவ வேதமே மெய்யான வேதமென்று தீர்மானித்து, ஞானஸ்நானம் பெற்றார். இதையறிந்த அவருடைய தந்தை கோபவெறி கொண்டு அவருக்கு நயபயத்தைக் காட்டியும், கிறிசாந்துஸ், சத்திய வேதத்தில் உறுதியாயிருந்தார்.
தந்தை பொய் மதத்தின் மட்டில் மத வைராக்கியமுள்ள தாரியா என்னும் ஒரு பெண்ணை தூண்டிவிட்டு, தன் மகனை மணமுடித்துக்கொண்டு அவரை அஞ்ஞானியாகும்படி துர்ப்புத்தி சொல்லச் சொன்னான்.
கிறிசாந்துஸ், தாரியாளுடைய துர்ப்புத்திக்கு இணங்காததுடன், பதிலுக்கு அவர் சொன்ன புத்திமதி யால் அவள் ஞானஸ்நானம் பெற்று அவரை மணமுடித்துக்கொண்டு இருவரும் கூடப்பிறந்தவர்களைப் போல ஜீவித்தார்கள்.
இதையறிந்த அதிபதி அவ்விருவரையும் பிடித்து, கிறிசாந்துஸை கயிறுகளாலும் சங்கிலிகளாலும் கட்டி சிறையிலடைத்து, தாரியாளை வேசிகள் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
சிறையிலிருந்த கிறிசாந்துஸை கட்டியிருந்த கயிறும் சங்கிலியும் அறுந்து உடைபட்டதைக் கண்ட சேர்வைக்காரனும் அவன் குடும்பமும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
தாரியாவைக் கெடுக்கும்படி வந்த துஷ்டருக்கு அவள் சொன்ன புத்திமதியால் அவர்கள் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றார்கள்.
இவைகளை யெல்லாம் கேள்விப்பட்ட அதிபதி கோபத்தால் பொங்கி பலவிதத்தில் அவர்களை துன்புறுத்தித்து அவர்களிருவரையும் ஒரு படுகுழியில் உயிருடன் புதைக்கும்படி கட்டளையிட்டான்.
யோசனை
நாம் வேதாகமங்களையும் ஞான புத்தகங்களையும் கவனமாய் வாசித்து வருவதுடன், இந்த வாசிப்பால் நமது இருதயத்திலுண்டாகும் ஞான ஏவுதலுக்கும் காது கொடுக்கக்கடவோம்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். க்றிஸ்பினும் துணை., வே.